பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

133


'இது அரசாங்க போன். சொந்த விஷயங்கள பேசக்கூடாது. சரி இதுதான்... கடைசித் தடவை. என்ன விஷயமுன்னு சொல்லுங்க. நான் நந்தினிகிட்ட பாஸான் செய்கிறேன். என்ன -- ராமுவுக்கு வலிப்பா -- என்ன மாமியார் நீங்க -- ஆஸ்பத்திரியில சேர்க்காமல் மருமகளுக்காக காத்துக் கிடக்கிறீங்களே. பேரனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல -- மருமகள் சீரழிஞ்சா போதும் என்கிற நினைப்பா? சரி சரி போன வையுங்க'.

வர்த்தினி, சேதி சொல்வதற்காக இண்டர்காமை தொட்ட கரங்களை சுருக்கிக் கொண்டாள். நந்தினியோட ஐந்து வயதுப் பயல் ராமுவுக்கு வலிப்பாம் -- சரியான சுட்டிப் பயல். விஜயதசமியோட, நந்தினி இந்தப் பயல இங்கே கூட்டி வந்தாள். நேத்திரம் பழ நேர்த்தி, கொடி முல்லை போன்ற லாவகம் -- அழகான மனிதக் குட்டி. இதே மேஜையில் ஏறி உட்கார்ந்த படியே 'ஆன்டி... ஆன்டி.. - நீ நல்லவள்னு மம்மி சொல்றாள் -- நெசமாவா?' என்று கேட்டு அவளை குறுக்கு வெட்டாய் பார்த்த பயல். டில்லியில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மகனின் ஐந்து வயது சாயல்.

வர்த்தினி, துண்டித்துக் கிடந்த தனியறையிலிருந்து வெளியேறி, பரந்து விரிந்த அலுவலகத்திற்குள் போனாள். பயத்தோடு எழுந்த அத்தனை பேரையும் கையமர்த்தி உட்கார வைத்துவிட்டு, நந்தினியின் முன்னால் போய் நின்று மேஜைமேல் கையூன்றி குவிந்தபடியே சேதி சொன்னாள். உடனடியாய் எழுந்து கீழே விழப்போன நந்தினியை தாங்கிக் கொண்டாள். அவள் மீது போட்ட பிடியை விடாமலே சுற்று முற்றும் பார்த்து ஆணையிட்டாள். அவளை அவளாக்கிய ஆணை.

'அழாதே நந்தினி. இப்ப வலிப்பு நின்னுட்டாம். ஆனாலும் ஆஸ்பத்திரியில சேர்த்துடுவோம் --- இந்தாப்பா ராமசாமி காரை ரெடி பண்ணு -- இந்தமாதிரி சமயத்துல ஆபீஸ் காரை பயன் படுத்துறதுக்கு விதிகள் இருக்கு. கேசவன்! நீங்களும் என்னோட வாங்க. சீதா நந்தினியை கூட்டி வா. இந்தாப்பா நாடிமுத்து -- தீபாவளி விண்ணப்பங்கள என் டேபிள்ல வச்சுடு'.

அவள் விகடன் - ஜனவரி, 1999