பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

135


ஏறிட்டுப் பார்க்கக்கூட தகுதியற்றவர் என்பதுபோல் உள்ளே போய்விட்டாள்.

ராமலிங்கம், ஒற்றைச்சோபா இருக்கையில் தொப்பென்று விழுந்தார். பின்னர் அதிலிருந்து எழுந்து நீண்ட சோபாவில் கைவிரித்து கால்விரித்துக் கிடந்தார். அந்தம்மா தண்ணீரோ மோரோ கொண்டுவந்து, அந்தத் தம்ளரை அவரது கரங்களில் திணிக்காமல் டொக்கென்று டீபாயில் வைத்தாள். நீலா, சென்னையில் இருக்கிறாளா அல்லது கோவைக்குப் போய்விட்டாளா என்று அவர் கேட்கப் போனார். அவள் கோவைக்குப் போகவில்லை என்று பதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக, எதிர்ப் பதிலை, தாங்க முடியாதவர் போல், அந்தக் கேள்வியைத் தள்ளிப்போட்டார்.

இவ்வளவிற்கும், நீலா அவர்களுடைய மகளல்ல. ஒட்டுப்புல்லாய் ஒட்டிக் கொள்ளும் உறவுப் பெண்ணும் அல்ல. கீழ்த்தளத்து வீட்டின் வாடகைக் காக வந்தவள்தான். இரண்டாண்டுகளுக்கு முன்பு, பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ஏழுவயது மகனோடும், நாலு வயது மகளோடும், இந்த வீட்டிற்குள் வந்தாள். 'எவ்வளவு சார் வாடகை... எவ்வளவு சார் முன்பணம்’ என்று வாசலில் நின்றபடியே கறாராகச் கேட்டாள். கட்டுபடி ஆகவில்லையானால், அப்படியே போய்விடலாம் என்பதுபோல் நின்று கொண்டிருந்தாள். இவர், அவளை உட்காரச் சொன்னார். அவரே எழுந்து பிள்ளைகளை உட்கார்த்தினார். ஆனாலும் ஒரு வீட்டுக்காரர், குடித்தன வீட்டை, கேள்வி முறையில்லாமல் விட்டுவிட முடியுமா?. எதிர் வீட்டுக்குண்டன், மாடிவீட்டை வயதான கிழவி என்று ஒருத்திக்குவிட, அவள் ஏழெட்டு பேத்திகளைக் கூட்டிவர, அப்புறம் மாமூல் பாக்கியால், போலீஸ் சோதனை, ஏற்பட்டு அந்தப் பெண்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு, இந்த வீட்டிற்குள் ஓடிவந்த போது, இவரே அப்படியொரு தொழில் செய்வதுபோல, காவலர்கள் அதட்டினார்கள்.

ராமலிங்கத்தின் அத்தனைக் கேள்விகளுக்கும், நீலா யோசனை செய்யாமலேயே பதிலளித்தாள். நாசூக்கானக் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில்கள்.... பெரிய இடத்துப்பெண்... காதல் திருமணம்.... பெற்றோர் தண்ணீர் தெளித்தல்.... அதே சமயம்