பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

திருப்பம்


சென்னையில் உள்ள ஒரு சின்னத் தொழிற் சாலையை விட்டுக்கொடுத்தல்....

ராமலிங்கம், 'இதெல்லாம் சகஜம்மா', என்று சொன்னபடியே, அவளுடைய மஞ்சள் கயிரை நோட்டமிட்டார். அவள் முகத்தையும் அதனையும் மாறிமாறிப் பார்த்தார். அதைப்புரிந்து கொண்டது போல், அவள் தலை கவிழ்ந்தாள். வீடு கிடைக்காது என்ற அனுமானத்தில் எழுவதற்கு முயற்சியாய் இருக்கையில் கையூன்றினாள். ஆனால் ராமலிங்கம், அவளை ஆசுவாசப்படுத்திய படியே அகமகிழ்ந்தார். 'ஆண் துணையற்ற - அனாதரவான - அதே சமயம் வாடகை பாக்கி வைக்காத ஒரு குடித்தனம் எந்த வீட்டுக்காரருக்கும் ஒரு வரப்பிரசாதம் அல்லவோ?' இப்படித்தான், தெற்கு வீட்டுக்காரன், தீரவிசாரிக்காமல், அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு, ஒருத்தனுக்கு வீட்டை விட, அந்த ஒருத்தன் பின்பத்தியிலிருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தபால் அலுவலகத்திற்கு நடந்து போய், முன்பத்தியிலுள்ள வீட்டுக்காரருக்கு, மணியார்டர் செய்கிறான். அந்த ரசீது நகல்களை கண்கொத்திப்பாம்பான மாநகராட்சிக்கும், கழுகுக் கார வருமானவரித்துறைக்கும் அனுப்பப் போவதாக மிரட்டுகிறானாம். இந்தப் பின்னணியில், நீலாவுக்கு வரவேற்பு வளையம் கூட வைக்கலாம்.

என்றாலும், கீழ் வீட்டிற்கு குடித்தனமாய் வந்த ஒருமாத காலத்திற்குள், நீலா இவர்களுடன் ஒன்றி விட்டாள். பள்ளிக்கூடம் அற்றுப்போன நாட்களில், அவள் பிள்ளைகள், இதே இந்த சோபா செட்டில் உருண்டு புரள்வதோடு, மங்கையர்கரசியை டிஸ்கோவுக்கு கூப்பிடுவார்கள். உடனே அந்தம்மா நாணிக்கோணி இவரைப் பார்ப்பது. அந்த டிஸ்கோவிற்கு இவரையும் கூப்பிடுவதுபோல் இருக்கும். அதோடு, யார் வீட்டில் யார், அதிகமாக சாப்பிட்டு இருப்பார்கள் என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். நீலாவுக்கு 'சார்' அப்பாவானார். 'மேடம்' , அம்மாவானாள். ஒரு தடவை 'எப்பா, எம்மா - நான் உங்களுக்கு வாரிசு இல்லாத மகள்' என்றாள். பிறகு ஒரு குமிழ்ச் சிரிப்போடு. 'கவலைப்படாதீங்க அப்பா... அம்மாவுக்கு இப்பகூட குழந்தைப் பிறக்கலாம்.... ஐம்பது வயதிலும் பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்கு’ என்ற போது, அந்த உச்ச வரம்பு வயதைத்