பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

139


விடமுடியுமா என்று யோசிப்பார். எப்படி அடித்து அவனை வீழ்த்தலாம் என்றுகூட நினைப்பார். இப்போதும் அடுத்தத் தெருப் பயலை அப்படித்தான் நினைத்தார். அதேசமயம் வள்ளுவர் வாக்காக்கிய மாற்றானின் துணைவலியை - அதாவது இன்னும் வெளிக்கி போய்க்கொண்டே இருக்கும் அந்த நாய் வலியை நினைத்து, பின்வாங்கி விட்டார். ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்று மங்கையர்கரசி சொன்னபோது, நிராகரித்தவர்.

சூடான குழம்பை சுமந்த கிண்ணத்துடன், சாப்பாட்டு மேஜைக்கு மீண்டும் வந்த மங்கையர்கரசி, விட்ட இடத்தைத் தொடர்ந்தாள்.

'எத்தனை தடவ சொந்தக் கார்ல கோவில் குளத்திற்கு கூட்டிப்போயிருப்பாள்? எத்தனை தடவை, நான் முடியாம முடங்கும்போதெல்லாம், என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போறதும், இந்த வீட்டுல இருக்கிறவருக்கு ஆக்கிப் போடறதுமா இருந்திருப்பாள்? கோயம்புத்துருக்கு போகும்போது, என் கழுத்தை கட்டிக்கிட்டு... அவள் அழுத அழுகை இருக்குதே... அந்த பிள்ளைகள் துடித்த துடிப்பு இருக்குதே... அது பிள்ளக்குட்டி பெத்தவங்களுக்குத்தான் தெரியும்.'

பிள்ளைக்குட்டி பெறாத நிலைமைக்கு, அவர் மட்டுமே பொறுப்பு என்பதுபோல அந்தம்மா பேசப்பேச, ராமலிங்கம் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். பின்னர், அந்தப் பொண்ணு, கோவைக்குப் போய்விட்டாள் என்ற தகவல் அறிந்து, குற்றவாளிபோல் குமுறினார். நீலாவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட நாய் விவகாரம், இப்போது, நாய்த்தனமாகத் தெரிந்தது. நடந்து போன நிகழ்வுகளை பாதி நினைத்து மீதியைத் தொடரமுடியாமலேயே அவர் கண்களை மூடினார்.

எந்த நாயும் இல்லாத அந்த தெருவிற்கு, எங்கிருந்தோ வந்தது ஒரு தெருநாய். கருப்புத் தோலும் வெள்ளைத் திட்டுக்களும் கொண்ட அனாதை நாய். ஆரம்பத்தில் எந்த வீட்டிற்குள்ளும் நுழையாமல், அந்த தெருவிற்குள்ளேயே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு, உலா வந்தது. நீலாவிற்கு, இந்த நாய் பிடித்துப் போய்விட்டது. தெருவெங்கும் சுற்றி இந்த நாயைத் தேடிப்பிடித்து மூன்று வேளையும் உணவுக்குவியலைப் போடுவாள். இதுகெட்டக் கேட்டிற்கு ரோஸி என்று வேறு பெயரிட்டாள்