பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

143


"நீலா போனபிறகு, அந்த நாய் துடித்தத் துடிப்பு மனுசங்களுக்குத்தான் புரியும். ரெண்டு நாள், இந்த வீட்டையே சுற்றிச்சுற்றி வந்தது. ஊளையிட்டு அழுதது. அப்புறம் பத்து நாளா இந்த வீட்டையே வெறிச்சப் பார்த்துக்கிட்டு அந்த குப்பமேட்டுல, வாடி வதங்கிக் கிடக்குது. அந்தப் பாவம், இந்த வீட்டை என்னெல்லாம் செய்யப்போகுதோ..."

ராமலிங்கம், துள்ளி எழுந்தார். இவ்வளவு அக்கறையாகப் பேசுகிறவள். நீலா காலிசெய்கிறதுக்கு ஒரு நாளைக்கு முன்னாலாவது, விவகாரத்தை தன்னிடம் டெலிபோனில் சொல்லாததில் ஒரு கோபம். அந்த சாப்பாட்டு மேஜையை நோக்கி, கைவீசி கால்வீசி நடந்தார். அந்தம்மாள் பயந்து போனாள். பேச்சை நிறுத்திவிட்டு, அவரை பீதியோடு பார்த்தாள். காட்டுத்தனமாய் கத்துவாரேயன்றி, இதுவரை கைநீட்டியதில்லை. அந்தக் குறையையும் நீக்கிவிடுவாரோ, என்ற அச்சம்.

ராமலிங்கம், மீன் மயமான வாழையிலையை வாரிச்சுருட்டி எடுத்து, பட்டை மாதிரி ஆக்கிக் கொண்டு, அந்தம்மாவை திரும்பிப் பாராமலேயே திரும்பி நடந்தார். அவள் பால்கனி வழியாக எட்டிப்பார்க்கும் போது இவர் குப்பை மேட்டுற்குப் போய்விட்டார்.

இருபக்கத்து நிலத்திலும் வீடுகட்டத் தோண்டப் பட்ட மண்குவியல்கள் அந்த நடுநிலத்தைப் புதைத்துவிட்டது. அதன் மேல் மண் சமாதி உருவாகி அதுவே குப்பை மேடானது. அந்த உரத்தில் தழைத்த எருக்கஞ் செடிகளின் வளைவுக்குள், அதே நாய் முன்னங்கால்களை நீட்டி அதில் முகம் புதைத்து கிடந்தது. அதன் வயிறு விம்மிப் புடைத்து அங்குமிங்குமாய் நெளிந்தது. ராமலிங்கம், அதன் முன்னால் போய், அந்த வாழையிலையை கீழே வைத்தார். அந்தச் சோற்றின் மீன்வாசனை அவரையே உட்கார வைக்கப்போனது. ஏகப்பட்டக் காகங்கள், நாய்க்கும் அவருக்கும் பயந்து, குய்யோ முறையோ என்ற பசி ஒலத்துடன் அரை வட்டமாய் பறந்தன. கால் முளைத்த மேகம்போல் ஒன்றாய் திரண்ட காகங்களை துரத்தியபடியே, அந்த நாய் அருகே போய் 'தோ... தோ.... சோ... சோ... சுச்சுச்சு... சாப்பிடுப்பா, சாப்பிடு, சோச்சோச்சோ.... சாச்சோ..' என்றார். அந்த