பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

147


மான்கூட்டத்தில், ஒன்றை மட்டும் தனிப்படுத்தி தாக்கும் கழுதைப்புலி போல, இந்த குட்டி மானுக்கு, ஒருவேளை ஏற்பட்டிருக்கக் கூடிய தனிமை- வெறுமையை, இவன் சாதகமாக்கி பாதகம் செய்கிறான்.

மார்த்தாண்டம், தனக்கு மட்டும் கேட்கும்படியாக பேசிக்கொண்டார். பெண்ணின் திருமண வயதை இருபத்தி ஒன்றாக வரையறை வைத்திருப்பதுபோல், ஒருபெண், காதலிப்பதற்கும் வயது வரம்பை நிச்சயிக்கணும்... பால்ய விவாகத்தை அந்தக் காலத்தில் தடை செய்தது போல், இந்தக் காலத்தில், பால்ய காதலையும் தடைசெய்ய வேண்டும்... போகட்டும். இந்தப் பெண்ணை அவள் பெற்றோரிடம் எப்படியாவது கொண்டுபோய் விடவேண்டும். தேவைப்பட்டால், அவர்களோடு சேர்ந்து, தானும் இவளுக்கு அறிவுரை சொல்லவேண்டும். ஆனால் எப்படி அவளை மீட்பது? அங்கே போய் அந்தப் பயலை ஒரு அதட்டுப் போடலாமா? போடணும்... போட்டே ஆகணும்....

மார்த்தாண்டம், அந்த 'காலி' மனையின் வாய்க்குள் பாதி நுழைந்து விட்டார். உடனே அந்தச் சிறுமி அலறியடித்து, படுத்தகோலத்தை, இருந்த கோலமாக்கினாள். இருக்கையில் உட்கார்ந்து அவரை எட்டிப் பார்த்தபடியே, கைகளை உதறினாள். பயத்தோடு பார்த்தாள். இவள் மேல் கைகளை இயக்கி, கண்களை எங்கோ வைத்திருந்த அந்தப் பயலை, உசுப்பிவிட்டாள். இவர் நின்ற தோரணையைக் கண்டு பயந்துபோய், அவனை முன்புறமாய்த் தள்ளி பின்புறமாய் அவன் முதுகுக்கும் இருக்கைக்கும் இடைப்பட்ட வெளியில் நெருப்புக்கோழியாய் மூழ்கிக்கொண்டாள். அவன், அவள் முதுகை தட்டிக் கொடுத்தபடியே வர்த்தையில் அடங்காத ஏச்சாய் ஒரு கத்துக் கத்தினான். ஆட்டோவில் இருந்து துள்ளிக் குதித்து தரைக்கு வந்து, மார்த்தாண்டத்தை ஒரு பார்வையும், இவளை மறுபார்வையுமாய் பார்த்தபடியே சவடாலாய் பேசினான்.

"நான். இருக்கும்போது... நீ ஏன் பயப்படுறே...? ஒன்ன காப்பாத்துறதுக்கு நான் கொலைகாரனாகூட மாறத்தயார்..."

அந்தப் பயல், மார்த்தாண்டத்தை பகைப்பார்வையாய், கராத்தே பாணியில் பார்த்தான். அவன் அளவிலேயே, அவர் செயலை அனுமானித்தான். கிழட்டுப் பயல் பங்கு கேட்க வந்திருப்பானோ...