பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

151


சரவிளக்குகளாய் மின்னிய மரம்... தரையில் வேப்பங்கொட்டைகள்... ரத்தம் சிந்திய மனிதர் போல் பால்சிந்திகிடந்தன. அதன் மேல் அதேமரத்துப் பூக்கள் ஆடைகள் போல் வியாபித்து இருந்தன. இதை ரசித்து பார்க்காமல், மேற்கொண்டு நடக்கப் போனவர், தலையில் ஒரு குட்டை உணர்ந்தார். வழுக்கைத்தலை என்பதால் வலி தாங்க முடியவில்லை. ஏறிட்டுப் பார்த்தால், ஒரு காகம், அவர் தலைக்கு மேல் வட்ட வட்டமாய் பறக்கிறது. உடனே இவர், அங்கே செல்லாத கோபத்தை, இங்கே செல்லுபடியாக்கப் போனார். கீழே குனிந்து, ஒரு குச்சியை எடுத்தார். மேலே பறந்த காக்கைக்கு குறிவைத்தும் தற்காப்பாகவும் அந்தக் குச்சியை தலைக்குமேல் சுழற்றினார். உடனே அந்தக் காகம் அங்குமிங்குமாய் பறந்து வீறிட்டுக் கத்தியது. அவ்வளவுதான்... அத்தனை காகங்களும், எங்கிருந்து வந்தனவோ, அவரைச்சுற்றி வியூகம் வகுத்து தாழப் பறந்தன. இறக்கைகளால் சிலம்பாடின. கால்களை ஆயுதங்களாய் நீட்டின. அவற்றின் வேகவேகமான கூக்குரல் அவை தங்களயே காக்கா காக்கா என்று அழைத்துக் கொள்வதுபோல் தோன்றின.

மார்த்தாண்டம் புரிந்து கொண்டார். வேப்பமரத்தில் காக்கைக்கூடு இருக்கும். அதற்குள் கண்விழிக்காத குஞ்சுகளும் இருக்கும். இவற்றைப் பெற்ற காகங்கள், பெறாத காகங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், அத்தனை காகங்களும் அந்தக் குஞ்சுகளுக்காக துடிக்கின்றன. எந்தச் சந்தர்ப்பத்திலும் மனிதனுக்குப் பயந்து ஒதுங்கும் இந்த கரும்பறவைகள் இப்போதோ வீரப்பறவைகளாகின்றன. பயப்படுபவை, பயமுறுத்துகின்றன. பிரிந்து பறந்தவை ஒன்றுபடுகின்றன.

மார்த்தாண்டம், அந்த காக்காக் கூட்டத்திலிருந்து லாவகமாய் தப்பித்தபடியே தொடர்ந்து நடக்கிறார். அந்தத் தெருமுனையில் ஏழெட்டு ஆட்டோக்கள். ஒரு யூனியன் கொடியின் கீழ் நிற்கின்றன. ஒற்றைச் சக்கரப்பல்லை மறைக்கும் ஒற்றை உதட்டோடு, அதற்குமேல் மின்னும் பல்பை மூக்குத்திகளாய் கொண்ட வாகனங்கள்... ஒருவர் ஆட்டோவை குடைகிறார். சிலர் இரவு டுட்டி என்பதாலோ என்னமோ பயணிகள் இருக்கையில் துங்குகிறார்கள். எஞ்சியவர்கள் - ஆங்காங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள். மார்த்தாண்டம், அங்கேயே நின்று