பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

155

தெரிந்தன. குரல்கொடுத்தவளை ஏறிட்டுப் பார்த்தாள் புளியம்பழம் போல் தோல்வேறு. எலும்பு வேறாய் தோன்றிய முப்பது வயதுப்பெண். இவளுக்கு அவள், தன் வருகையின் நோக்கத்தைச் சொன்னாள்.

"எங்கள இந்த வீட்டுல குடியிருக்கச் சொன்னாங்கே... நீ நாட்டுப்புறத்துக்குப் போறீயாமே... வேணுமுன்னா நான் ஒரு நாள் கழிச்சு வரட்டுமா..... அதுவரைக்கும் அந்த மரத்தடியில இருந்துக்கிறோம்."

பார்வதி, வேண்டாம் என்பதுபோல் தலையை ஆட்டி, அவள் முன்னால் விசிறிபோல் கையையும் ஆட்டினாள். வந்தவளும், அவளது குட்டிக்குருமாக்களும் உள்ளே போகலாம் என்பது போல் கையை துடுப்பு போல் ஆக்கிக் காட்டினாள். வந்தவள், நின்றவளை தயங்கித் தயங்கி கேட்டாள்.

"ஒன் சாமான் செட்ட எடுக்கலியாம்மா? பரவாயில்ல. அப்புறமா வந்துகூட..."

பார்வதிக்கு இப்போது பேசியாக வேண்டிய கட்டாயம். முகம் திருப்பி, கண்துடைத்து மீண்டும் முகம் கொடுத்துப் பேசினாள்.

"ஒரு பிளாஸ்டிக் குடமும்..... வெண்கலச் செம்பும் இரண்டு, ஈயத்தட்டுந்தான் இருக்குது..... நீயே வச்சுக்க தலைச்சுமை மிச்சம்"

"எங்களுக்கும் வெளியூர்தான். திருவண்ணாமலை பக்கம். நேற்றுதான் வந்தோம். அவரு மலை மேஸ்திரியைப் பார்த்துட்டு, அப்படியே வவுத்த கழுவுறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வர போயிருக்காரு..... ஒனக்கு எந்த ஊரும்மா?"

"எந்த ஊருமே சொந்தமில்ல."

பார்வதி, கண்ணிர்த்திவலைகளுக்கு இடையே, நிழல் உருவமாய் தெரியும் புதியவளை ஏறிட்டுப் பார்க்காமலேயே நடந்தாள். வீடு பறிகோகும் நிலைமையிலும் அசத்தலாய் நின்றவள்தான். ஆனால், புதியவள். தன் வீட்டுக்காரரைப் பற்றிச் சொன்னதும், அவளுக்கு அவன் ஞாபகம், நெஞ்சில் முட்டி மோதியது. வீடு போகலாம்..... வீட்டுக்காரன் போகலாமோ...