பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

சிக்கிமுக்கிக் கற்கள்


பார்த்தாள் உறவுதான். இவள்தான், இந்த வேலையை மென்மையாய் மறுத்தாள். கல்லுடைக்கும் வேலையே சத்திரியத்தனமானது. யந்திரத்துக்கு கல் சுமப்பது சூத்திரத்தனமானது என்கிற அர்த்தத்தில், இவளிடம் பழக்கப்பட்டவள்கள், சொல்லிவிட்டார்கள். இவளுக்கும் இங்கேயாவது, தான் சத்திரிகையாய் இருக்க வேண்டும் என்ற ஆசை. இப்போதோ மீண்டும் சூத்திர புத்திரியாய் செயல்பட தயாரானாள். ஆனால் அவரோ, மேயுற மாட்ட கெடுக்குமாம் நக்குற மாடு... ஒங்க வேலைய பாருங்களேன்.... எவ்வளவு நேரமா லாரியை காக்கவைக்கிறது? என்று இவளை நின்று ஓரங்கட்டிப் பார்த்த கூலிப் பெண்களுக்கு ஆணையிட்டார். இவளிடம் பேசுவதை கவுரக்குறைவாக நினைத்தாரோ அல்லது மலைக்கொம்பன்களால் இருக்கும் கவுரமும் பறிக்கப்படும் என்று பயந்தாரோ...

பார்வதியின் நினைவுகளைப் போல், கால்களும் பின்னின; ஆனாலும், அந்த நினைவுகளை ஆழ்மனக்குழியில் புதைத்துவிட்டு, நடக்கக்கூடிய நிசங்களை, மனதிற்கு முன் வைத்தாள். கைது செய்யப்பட்ட கணவனை, இனத்தான்கள் கைவிட மாட்டார்கள்தான். 'அதுக்கு' ஜாமீன் கிடைச்சிடும். அய்யய்யோ. ஜாமீன்ல 'அது' வெளிவரும்போது. அடுத்த சாதிக்காரன் ஒரே வெட்டா வெட்டிடப்படாதே. எத்தனையோ இடத்துல இப்படி கோர்ட்டு வாசலிலேயே வெட்டிப் போடுற காலமாச்சே. 'அதுக்கு' ஒண்னு கிடக்க ஒண்ணு ஆயிடக்கூடாதே... இசக்கியம்மா... பகை மறக்குறது வரைக்கும் அது ஜெயிலிலேயே கிடக்கட்டும். அப்போ... என் கெதி... ஊருக்குப் போனாலும் அடுத்தச் சாதிக்காரன் உண்டு இல்லன்ன பண்ணிடுவானே. இங்கேயும் இருக்க விடமாட்டான்களே...

'திக்கற்றோர்க்கு தெய்வமே துணை என்பாங்க. இப்போ அந்த தெய்வமே திக்கற்றுப் போயிட்டோ... இல்லாட்டால் வெள்ளையும் சொள்ளையுமா ஜீப்ல வந்த ஆபிலர் பயலுக, இப்படி ஈரத்துணியைப் போட்டு கழுத்த அறுப்பாங்களா? உள்ளத உள்ளபடி சொன்னால், பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வரும் சத்துணவு கிடைக்கும் ஆஸ்பத்திரி நிச்சயம். இப்படி லொக்கு லொக்குன்னு இருமுறதுக்கு காரணமான கல்புகையை நீருல கரைக்கிறதுக்கு ஏற்பாடு செய்யப்படும்.