பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

சிக்கிமுக்கிக் கற்கள்


“கிடைக்கிற லாபத்த சமமா பங்கு போடணும். ஆனால், ஆயிரம் பேர்ல. உங்கள மாதிரி இருபது பேரு, ஒண்ணாச் சேர்ந்து இந்த மலையை பங்கு போட்டு சம்பாதிக்கீங்க... ஒங்கள மாதிரி மெம்பரான எங்களுக்கு கூலிதான் கொடுக்கிங்க...”

அந்த கூட்டுறவு இல்லாத சங்கத்தில் பகுதி கிளார்க்காக இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு இளைஞன்... உள்ளதைச் சொன்னால் உயிரோடு கொளுத்தி விடுவார்கள் என்று பயந்து கிடந்தவன். இப்போது கொம்பன்களின் கணக்கை தீர்ப்பது போல் கணக்கைச் சொன்னான்.

“முந்நூறு ரூபாய் லோடுல, இவங்களுக்கு கிடைக்கிறது எழுபது ரூபாய்தான். நீங்க உழைக்காமலே திங்கிறது இருநூற்று முப்பது ரூபாய்... இலைமறைவு காய்மறைவாய், இதை தட்டிக் கேக்கிறவங்கள, போலீஸ்ல ஒப்படைக்கிறீங்க. இல்லன்னா... கைகால முறிக்கிறீக... இந்த அப்பாவிப் பொண்ணோட ஆம்படையான், வீட்டுக்காரிக்கு வக்கலாத்து வாங்குனதுக்காக, அவன் தஞ்சமுன்னு நினைச்சுச் சொன்ன சேதிய, போலீசுக்குச் சொல்லி விலங்குபோட வைச்சிங்க... ஏய்... ராமய்யா... இங்க வாய்யா...”

இதே மாதிரி சந்தர்ப்பத்தில் ஒரு கையை இழந்த ராமய்யா கூட்டத்திற்கு முன்னால் வந்தார். அவர் தோளில் கை போட்ட படியே ஒரு மூதாட்டி வேட்டைக்குபோகும் பெண் சிங்கமாய் கர்ஜித்தாள். வழக்கமாய் நடுங்கும் அவளது குரல், இப்போது நடுங்க வைப்பதுபோல் ஒலித்தது.

“இவன் வேலையும் பறிபோச்சு... கல்யாணமும் நின்னுபோச்சு... இப்படி எத்தனையோ பேரு... இவங்களுக்கும் ஏதோ செய்யப் போறதாத்தான் சொன்னீங்க.. என்ன செய்து கிழிச்சிங்க?

அந்த மூதாட்டியின் குரல் கட்டிப் போனதால் இன்னொருத்தி தொடர்ந்தாள்.