பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அலைவீச்சு

 இந்த நூல், எனது பத்தொன்பதாவது சிறுகதைத் தொகுப்பாகும். முன்னைய தொகுப்புகள், இந்த நூற்றாண்டின் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளாதார இலக்கிய இயல்புகளை ஆவணப்படுத்தியவை. இந்தத் தொகுப்போ எண்பதுகளில் படிப் படியாகவும், தொன்னூறுகளில் படிதாண்டியும் ஏற்பட்ட மாற்றங்களை காலக்கணக்கில் தீர்மானிக்கும் இலக்கிய ஆவணந்தான்.

இந்தத் தொகுப்பிற்காக கடந்த எண்பதுகளில் எழுதிய கதைகளையும், இப்போது எழுதிய கதைகளையும் படிக்கும் போது, என்னுள்ளேயே இந்தச் சமூகத்தை போல, ஒரு மாறுதல் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். கிராமிய சொல்வடைகளை, திரைப்பட வசனங்களும், விவசாய கமலை இறைத்தலை, பம்பு செட்டுகளும், உழவு மாடுகளை, டிராக்டர்களும், துரத்திவிட்டக் காலம் இது. இந்த மாற்றத்தைப்போல், மொழி மாற்றம், நல்லதும் கெட்டதுமாக ஏற்பட்டுள்ளது. என்னைப் பொறுத்த அளவில், தமிழ் வழி கல்விப் போராட்டத்தின் தாக்கத்தால் ஆங்கில வார்த்தைகளை கூடியவரையில் தவிர்த்து, அதேசமயம் இயல்பான பேச்சுத் தமிழை கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறேன். அதுபோல் புதிய சக்திகளான அறிவொளி இயக்கம், வீதி நாடகங்கள், தலித் இயக்கம், பெண்ணியம் போன்றவற்றை எனது இலக்கியக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பின்னணியில்தான், இந்தத் தொகுப்பை கொண்டு வருகிறேன். இதிலுள்ள 16 கதைகளில் கடைசி ஏழு கதைகள் அண்மைக் காலத்தில் எழுதப்பட்டவை. இந்த இரண்டு வகைக் கதைகளிலும் உள்ளடக்கம் மாறவில்லை. என்றாலும் உருவம் ஒரளவு மாறியிருக்கிறது. இந்த உருவமாற்றம், எனது இலக்கிய வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல், மேஜிக்கள் ரியலிசம் போன்ற புதைமண்ணில் நான் காலூன்றவில்லை. இந்த இசங்களிலும், சில பயன்பாட்டுப் புதுமைகள் இருந்தாலும், என் ஏழை-எளிய மக்களை, சமூகப் பார்வையில் வைத்து, இயல்பு நிலையை, யதார்த்தமாக மாற்றி எழுதுவதில் இருக்கும் நிறைவு இந்த இலக்கிய இசங்களில் எனக்கு இல்லை.

இந்தத் தொகுப்பிற்கு எனது இலக்கிய முன்னோடியான தோழர் கு. சின்னப்பபாரதி அணிந்துரை வழங்கியிருப்பது