பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ΧΧ

 எனக்குக் கிடைத்த மிகப்பெரியதோர் சிறப்பு மிக்க இலக்கியக் கெளரவம். இந்த அணிந்துரை, இன்றைய சமூகத் தேவைக்கான ஒரு இலக்கியப் பிரகடனம் ஆகும். மக்களின் கூட்டுப் பாராட்டத்தை, சிறுகதையாக்கும்படி என்னை அவர் பணித்ததை, சிரமேல் கொண்டிருக்கிறேன். இதன் விளைவுதான் “வைராக்கிய வைரி”யும், “சிக்கிமுக்கிக் கற்களு”ம்.

இந்தப் பின்னணியில், மக்கள் எழுத்தாளர்களைப் பற்றி, புதிய பதிவை உருவாக்க, நானும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவரான தோழர் ச. செந்தில்நாதனும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர். இராம. இளங்கோவும், மக்கள் எழுத்தாளர் பா. செயப்பிரகாசமும் ஒன்று பட்டு செயலாற்றுகிறோம். இதுவரை, முதல் கட்டமாக இலக்கிய வாணர்களான தி.க.சி., கு. சின்னப்பபாரதி, டி. செல்வராஜ், கூடவே இந்த அலைவீச்சாளன் ஆகியோரின் இலக்கிய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சிக்கு உறுதுணையாக, முற்போக்கு எழுத்தாளர் இயக்கத் தோழர்களும் நிற்கிறார்கள்.

தோழர்களான கு. சின்னப்பபாரதி, டி. செல்வராஜ், பொன்னிலன், மேலாண்மை பொன்னுச்சாமி, பா. செயப் பிரகாசம், தனுஷ்கோடி ராமசாமி, காசியபன், தேனி சீருடையான் உள்ளிட்ட எழுத்தாளர்களாகிய நாங்களும், எங்கள் வழி இளம் படைப்பாளிகளும் பயன்பாட்டு இலக்கியத்தைப் படைக்கிறோம். என் வாடாமல்லி நாவலை சரியாகப் புரிந்து கொள்ளாத இலக்கியவேதாந்த வெத்து வேட்டுக்களுக்குப் பதிலாக, என்னைத் தந்தையாக அனுமானிக்கும் ஒரு அலிமகளின் கடிதத்தை அப்படியே பிரசுரித்திருக்கிறேன். இந்த நாவலுக்குப் பிறகுதான் திரைப்பட- தொலைக்காட்சித் துறையினருக்கு அலிகளை, மனித நேயத்துடன் சித்தரிக்க வேண்டும் என்ற “ஞானோதயம்” ஏற்பட்டிருக்கிறது. இது பயன்பாட்டு இலக்கியயத்திற்குக் கிடைத்த வெற்றி.

இந்த நூலுக்கு செம்மையாக முகப்போவியம் தீட்டிய தோழர் ஜமால், அச்சிட்டுக்கொடுத்த மணிவாசக நூலகப் பேராசிரியர் முனைவர் ச. மெய்யப்பன், தோழர்கள் சோமு, குருமூர்த்தி ஆகியோருக்கும், எனது படைப்புகளை மக்களுக்கு கொண்டு செல்லும் சகோதரர் மூவேந்தர் முத்துவுக்கும், என்னை முப்பதாண்டு காலமாக இலக்கிய உலகில் நிலைநிறுத்தி வரும் வாசகப் பெருமக்களுக்கும் மனமார்ந்த என் நன்றி.

தோழமையுடன்,
க. சமுத்திரம்