பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வைராக்கிய வைரி


தூக்கிப் பிடித்து அழுத்தினாள். செல்லாத்தா மகளருகே சென்று அவள் காலைத் தூக்கி தன் இடுப்பில் வைத்துக் கொண்டே, “அடி பலமாப் பட்டுட்டா..? கண்ணு மண்ணு தெரியாத காவாலிப் பய... சைக்கிளை அவன் ஓட்டுனா இல்ல... அவனை சைக்கிள் ஓட்டுச்சுதா...?” என்றாள்.

ராசகுமாரி பூவிரிந்ததுபோல் சிரித்தாள். மகள் கண் சிவப்பாக இருப்பதைப் பார்த்ததும் தன் முகம் சிவக்க. “கண்ணுல தூசி கீசி விழுந்துட்டா? நான் வேணுமுன்னா ஊதட்டுமா...” என்று சொல்லிக் கொண்டே செல்லாத்தா மகளின் இமைகளை விலக்கப் போனாள்.

உடனே ராசகுமாரி, “போம்மா. நாலுபேரு நிக்கிற இடத்துல ரகள பண்ணப்படாது.” என்று சிணுங்கிய படியே சொல்லிவிட்டுச் சிறிது நகரப் போனாள். இதற்குள் விறகுக்காரர் ஒருவர் சிரித்தபடியே கேட்டார்.

“செல்லாத்தா, அத்த! பேருக்கு ஏத்தபடி பொண்ணப் பெத்தே. எட்டாவது வகுப்புல நல்லாப் படிச்ச பொண்ணயும் நிறுத்திட்டுப் புல்லு வெட்டப் போட்டுட்டே... கண்ணுலகூட முள் குத்தும்... காலுட பட்டுட்டுன்னு கலங்கினா என்ன அர்த்தம்....”

செல்லாத்தா, சொன்னவரைப் பார்த்தாள். அந்த பார்வையில், முன்பு இதேமாதிரி கேள்வி கேட்டவர்களுக்கு, “வயித்துல மூதேவி இருக்கும்போது வாயில எப்படி சரஸ்வதி நிப்பாள்..? அந்த மனுஷன் செத்த பிறவு இந்த மவள் எப்படிப் படிக்க முடியும்?” என்ற பதில் மண்டிக் கிடந்தது.

இதற்குள் மனம் பொறுக்காத இன்னொரு மனிதர், “போக்கா... நம்ம ஊருக்கு ஒருதடவ கலெக்டரம்மா வரும்போது, நான் நம்ம ராசகுமாரியத்தான் நினைச்சேன். இவளும் படிச்சிருந்தால் கலெக்டரா வந்திருப்பாள்” என்றார்.

எல்லோரும் ராசகுமாரியையே பார்த்தார்கள். அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. காடு, மலைகளில் புல்வெட்ட விறகு வெட்டப் போனாலும், உடம்பில் எந்தவிதச் சுவடும் பதியாமல் தோன்றும் அந்த சேதாரம் இல்லாத சிறுசையே பார்த்தார்கள். இதர பெண்களைப்போல், ‘என்ன சின்னய்யா.. கத்தரிக்காய் வித்ததுல எவ்வளவு கிடச்சது’ என்று கேட்கவும் மாட்டாள். அப்படிக் கேட்ட