பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

3


 பெண்கள் தகராறு என்று வந்துவிட்டால் "சொத்தக் கத்தரிக்காயையா கொடுத்தே... ஒன் கையில கரையான் அரிக்க..." என்பதுபோல் திட்டவும் மாட்டாள். பார்வையிலேயே மரியாதை கொட்டுபவள் குறுஞ்சிரிப்பிலேயே பண்பாட்டைக் காட்டுபவள்.

அந்தப் பக்கமாக 'களை' வெட்டிவிட்டு வந்த முத்துமாரி, "செல்லாத்தா சித்தி! ஒன் மவளுக்குக் கல்யாணமாம். மெட்ராஸ் மாப்பிள்ளையாம்... சொன்னால் சாப்பாடு போடணுமுன்னு நினைச்சு சொல்லலியா..." என்றாள். செல்லாத்தா ஆதங்கத்தோடு சொன்னாள்.

"கண்காணாத சீமைக்கு இவள அனுப்பப் போறத நெனச்சா எனக்கு காலும் ஒட மாட்டக்கு கையும் ஒடமாட்டக்கு... இவள விட்டுட்டு எப்படித்தான் பிரிஞ்சிருக்கப் போறேனோ..."

தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிரிவுத்துயர் பிழிந்தெடுத்தது. ராசகுமாரி கண்களை மறைக்க வேறு பக்கமாகத் திரும்பியபோது செல்லாத்தா, "புல்லுக்கட்டுல உட்காரண்டி ஏன் நிக்கே? இல்லன்னா வீட்டுக்குப் போயேன். உட்காருடி...?" என்று சொல்லிக்கொண்டே மகளருகே போனபோது, அவள், "ஒனக்கு வேற வேல இல்ல இப்போ? நின்னா கால் ஒடுஞ்சுடுமா..." என்று மெல்ல முணுத்தபோது, செல்லாத்தா, "பாரு இவள..." என்பது மாதிரி முத்துமாரியைப் பார்த்தாள்.

உடனே முத்துமாரி "இவள் வயித்துலயும் ஒரு பூச்சி புழு பிறந்த பிறவுதான், ஒன்னோட துடிப்பு இவளுக்குத் தெரியும். ஒனக்குத் தெரியாதா? ஒருத்தி தாயாவும் போதுதான் அவள் தன்னோட அம்மாவுக்கு மகளாகிறாள். ஏடீ... ராசகுமாரி... உடனே ஒன் அம்மாவுக்குப் பேரனக் குடுடி அவளே வளர்த்துக்கட்டும்."

ராசகுமாரி எல்லோரையும் கூச்சமாகப் பார்த்துக் கொண்டாள். பிறகு கல்யாண விளைவுகளைக் கற்பனை செய்ய நினைத்தவள்போல் புல்கட்டில் உட்கார்ந்தாள். செல்லாத்தா வயிறாற பெற்ற மகளை வாயாரப் பருகிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று பன்றி உறுமுவதுபோல் சத்தம் கேட்டது. எல்லோரும் நிமிர்ந்து பார்த்தபோது, மிராசுதார் மனைவி பூவம்மா, என்னடி