பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

5


சீட்டு விளையாடிக்கொண்டிருந்த அவளின் இருபத்தைந்து வயது மகன் முத்துப்பாண்டி, ஒடோடி வந்தான். வந்த வேகத்தில், ராசகுமாரியைக் காலால் இடறிக் கீழே தள்ளினான். மல்லாந்து விழுந்தவளின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி கன்னத்தில் தன் கை சிவக்கும் வரை அடித்தான். அவள் காலை காலால் முட்டினான். அவனைத் தடுக்க வந்த செல்லாத்தாவை இடதுகை முட்டியால் தட்டிவிட்டான்.

ராசகுமாரியை இன்னும் அடித்திருப்பான். அதற்குள் நிலைகுலைந்து நின்ற சில்லறை வியாபாரிகளும் விறகு வெட்டிகளும் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். ஒரு சில ஏழைபாளைகள் எதிர்ப்புக் காட்டப் போனார்கள். அதற்குள் அவன், "என்கிட்ட எவன் வாராமுன்னு பாக்கலாம்" என்று கர்ஜித்தபோது அந்த அன்றாடம் காய்ச்சிகள் அடங்கிப் போனார்கள். மனதிற்குள் திட்டிக் கொண்டார்கள்.

பத்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடிய கூட்டம் எந்தவிதமான கருத்தையும் சொல்லாமல் கலைந்து கொண்டிருந்தது. ராசகுமாரியும் அந்தக் கூட்டத்தைப்போல் கலைந்துபோனாள். கிழிந்த ஜாக்கெட்டை மறைக்காமல் - நொறுங்கிய வளையல்களைக் கழற்றாமல், நிலையிழந்த கோலத்தோடு - களையிழந்த முகத்தோடு - கண்நிறைந்த நீரோடு புல்லுக்கட்டில் சாய்ந்து கிடந்த மகளை நோக்கி முத்துப்பாண்டியின் கனத்த உதையில் கீழே விழுந்து கிடந்த செல்லாத்தா மெள்ள எழுந்து மகளருகே நொண்டியடித்துச் சென்றாள். பிறகு அவளைக் கட்டிப் பிடித்துக் கதறினாள். எல்லோரும் இருவரையும் பரிதாபமாகப் பார்த்தபோது ராசகுமாரி மலங்க, மலங்க விழித்தாள். செல்லாத்தா மகளை விட்டு விட்டு நிமிர்ந்து நின்று சபதமிட்டாள்.

"கவலப்படாதடி... ஒன்னைக் கைநீட்டி அடிச்சவனைப் பழிக்குப் பழி வாங்குறேனா இல்லியான்னு பாரு. ஒன்னைத் தலைகுனிய வச்சவனைத் தலைநிமிர முடியாமச் செய்யுறேன் பாரு எழுந்திருடி..."

அம்மாவின் போர்க்குரலுக்குக் கட்டுப்படாமல் ராசகுமாரி வெறித்துப் பார்த்தபோது, யாரோ இருவர் அந்த இளங் கன்றைப் பிடித்துத் தாயிடம் விட்டார்கள். இதற்குள் எதுவுமே நடக்காததுபோல்