பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வைராக்கிய வைரி



சிரித்தபடி பேசிக்கொண்டு போவதைக் கண்டாள். உடனே அவளும் ஓடிவந்து அழுதாள். சுவரில் மோதிய மகளைப் பிடிக்கப் போனாள். முடியவில்லை. தானும் தன் பங்கு சுவரில் மோதியபோது ராசகுமாரி நிதானப்பட்டாள்.

செல்லாத்தா, நம்பிக்கை இழந்தவளாக புல்வெட்டப் புறப்பட்டாள். எதிரே சுடலைமாடச்சாமியாடி வந்தார். அவளால் தாளமுடியவில்லை. ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் சாமியாடி, "எனக்கு எல்லாம் தெரியும். இன்னும் பத்து நாள்ல பாரு, ஒன் மகள அடிச்சவன் அக்குவேறு... ஆணிவேறா ஆகப்போறான் பாரு... சொள்ளமாடன் சொல்லிட்டான்" என்றார்.

செல்லாத்தாவுக்குப் பாதி நம்பிக்கை வந்தது. கம்மாக்கரையில் நடந்தபோது, "சொள்ளமாடா... சாமியாடி... சொன்னது சரிதான்னா இப்பவே அசரீரியா ஏதாவது கேக்கணும்" என்றாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு முன்னால் போன இரண்டுபேர், "உப்பத் தின்னவன் தண்ணியக் குடிச்சுத்தான் ஆகணும். வேணுமுன்னால் பாரு" என்று பேசிக்கொண்டு போனார்கள். செல்லாத்தா தைரியப்பட்டாள்.

பத்து நாட்களில் ஐந்து கழிந்தன. செல்லாத்தாவுக்கு நம்பிக்கை சந்தேகமாகியது. வீட்டுக்குத் திரும்பும் வழியில் எதிரே ஒரு நாய் வந்தது. "இந்த நாய் திரும்பி நடந்தால் நான் நினைச்சது நடக்கும்" என்று நினைத்துக் கொண்டாள். நாய் திரும்பி நடந்தது. அவள் திருப்தியோடு நடந்தாள். எட்டாவது நாள், ஒரு சின்னப்பையன் எதிரே வந்தான். அவளால் தாள முடியவில்லை. "ராசா... பாட்டி நினைச்சது நடக்குமா? தெய்வ வாக்காய் சொல்லுடா ராசா..." என்றாள். பையன் பயந்துபோயோ என்னவோ, "நதக்கும்... நதக்கும்..." என்றான்.

செல்லாத்தாவுக்குப் பூரிப்பு. நாட்கள் நகர்ந்தன. "காளியாத்தா... செக்கம்மா... சொள்ளமாடா... என் மகளோட குனிஞ்சதல நிமுறணும்... நிமுறணும்" என்று சொல்லிக் கொண்டாள். நாட்கள் கூடியதுபோல் அவள் விண்ணப்பித்துக் கொண்ட தெய்வங்களின் பட்டியல்தான் கூடியது. பத்து நாட்களும் கழிந்து பதினோராவது நாள் வந்தது. முத்துப்பாண்டி வீட்டில், பங்காளிகளின் 'ஆக்கிப் போடும்' கூட்டம்.