பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

11



செல்லாத்தா ஆவேசத்துடன் வீட்டுக்கு வந்தாள். ராசகுமாரி மூலையில் சாய்ந்தபடியே ஒரு கடிதத்தைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டே யாருக்கோ சொல்வதுபோல், தாயிடம் சொன்னாள்.

"என்னைக் கட்டிக்கப்போறவருக்குக் கடுதாசி போட்டேன். நடந்ததை எழுதினேன். என் அவமானத்தத் துடச்சிட்டுத்தான் தாலி கட்டணுமுன்னு எழுதினேன். அதுக்கு அவரு, 'இவ்வளவு நடந்த பிறகு கல்யாணம் பண்ண முடியாது'ன்னு எழுதியிருக்கார்.

செல்லாத்தா மகளின் கையில் இருக்கும் கடிதம்போல் கசங்கிப் போனாள். பத்து நாட்களுக்கு முன்பு ராசகுமாரி பக்கத்து வீட்டுப் பையன் மூலம் கவர் வாங்கிக் கடிதம் எழுதியதைப் பார்த்தாள். இளமையில் தன்னோடு படித்து இப்போது பல இடங்களில் நல்ல வேளையில் இருக்கும் சிநேகிதிகளுக்கு மகள் கடிதம் எழுதுவதுண்டு. அந்தக் கடிதத்தையும் அப்படித்தான் எடுத்துக்கொண்டாள். ஆனால்..?

ராசகுமாரிக்குக் கல்யாணம் நடந்து சென்னைக்குப் போய்விட்டால் அவளுக்குப் பட்ட அவமானம் மறந்து போகலாம் என்றம், தானும் ஒருவேளை அங்கே போய் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றும் நினைக்கத் துவங்கிய செல்லாத்தா, உடல்போய் உயிர் மட்டும் பிடிதாரம் இல்லாமல் நிற்பதுபோல் நின்றாள். மகளைப் பார்த்தாள். அவளோ முடங்கிக் கொண்டாள்.

செல்லாத்தாவின் தலைக்குள் ஏதோ ஒன்று குடைந்தது. யாராவது ஒருவர் அவளிடம் 'கவலைப்படாதே' என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. வெளியே ஓடினாள். வெறி பிடித்தவள்போல் ஓடினாள்.

கண் பார்க்காப் பாதையில் மண்புழுபோல் நகர்ந்தாள். மரணக் கிணறைத் தாண்டும் யந்திர வண்டிபோல் தாவினாள். எதிரே சுடலைமாடச் சாமியாடி வந்தார். ஆறுதலை விரும்பினாள். அடைக்கலம் நாடினாள். நல்லது நடக்கும் என்ற நப்பாசை.

"என்னய்யா... ஒருவாரத்துல நீரு நன்மையாய் ஆரம்பிக்குமுன்னு சொன்னது தீமையாய் முடிஞ்சிருக்கு... சொள்ளமாடன் இப்போ என்ன சொல்லதார்?"

சாமியாடிக்கு அப்போ ஏதோ கஷ்டகாலம். கத்தினார்.