பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வைராக்கிய வைரி



'சொள்ளமாடன்னு கிடையாது. அப்படி இருந்தால் அவனை நான் கொல பண்ணிப்பிடுவேன். நீ வேற! இனிமேல் மாடனப் பத்திக் கேட்காத... அது வெறும் கல்லு...!"

சாமியாடி, தன் பாட்டுக்குப்போன போது செல்லாத்தா ஏதோ ஒரு குறுக்குத் தெருவில் இலக்கு இல்லாமல் நடந்தாள். அந்த வழியாக வந்த முத்துப்பாண்டியின் தாய்மாமன் அவளை எச்சரித்தார்.

செல்லாத்தா, தன்பாட்டுக்கு நடந்தாள். உயிரே எந்திரமாகி, உடலே ஒரு ஜடமானதுபோல் யாரோ தன்னை இழுத்துக்கொண்டு போவது போல நடந்து நடந்து ஊர்க் கச்சேரியின் முகப்பிற்கு வந்தாள். அங்கே திரண்டு நின்ற கூட்டமோ, கசாமுசா சத்தங்களோ, அவள் காதில் பதிவாகவில்லை.

கோயில் விழாக்களிலும், கல்யாணம் கருமாந்திரங்களிலும் அவசர அவசரமாக வந்துவிட்டு பிழைப்புக்கு ஒடும் அன்றாடம் காய்ச்சிகள், நாட்டாண்மைக்காரரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அன்று கத்தி கம்புகளோடு திரண்டு நின்றார்கள். எல்லோருக்கும் ஏனோதானோவாய் தெரிந்த ஒரு சேதியை, தலை நரைத்தாலும் உடல் நரைக்காத நாட்டாண்மை எடுத்துரைத்தார்.

"இவ்வளவு நாளா... நான் உங்களுக்கு தீர்ப்பளிச்சேன். இப்போ நீங்க எனக்குத் தீர்ப்பளிக்கணும். வெட்டாம்பட்டிக்கு என் மகன் போயிருக்கும்போது, நம்ம ஊரை கேவலமா பேசியிருக்காங்க. அத தட்டிக்கேட்ட என் மகன் ராசதுரைய. அந்த ஊரு பயலுவ அடி அடின்னு அடிச்சிருக்காங்க. இந்த பதினெட்டு பட்டிகளும் பாத்து பயப்படுற பட்டி நம்மபட்டி இத என் விவகாரமா நினைக்காம, நம்ம ஊர் மானமா நெனச்சு, அந்த ஊருக்குபோயி அடிச்ச பயலுகள பிடிச்சிக்கிட்டு வரணும். உங்களோட இன்னய பொழப்புக்கு நான் பொறுப்பு. ஏதாவது ஏடாகுடமா நடந்தாலும் சகலத்தையும் நான் பார்த்துக்கிடுவேன். பொறப்படுங்க."

சில வேல் கம்புகள் ஆவேசமாய் உயர்ந்தன. அரிவாள்கள் முதுகிலிருந்து முன்பக்கம் வந்தன. வேல் கம்பில்லாத ஏழை பாழைகளின் கைகளில் சாட்டைக்கம்புகள் ஓங்கி நின்றன. ஆங்காங்கே பெண்களின் ஒப்பாரிகள். இந்தப் பின்னணியில், அம்மாவை தேடிவந்த