பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

15



உரத்த சத்தத்தில் மூச்சு விட்டபடி ஒன்றும் பேசாமல், அவர்களையே முறைத்துக்கொண்டிருந்த அர்ச்சுனனைப் பார்த்து, வசந்தா, தட்டுத் தடுமாறி, "குட்மார்னிங் ஸார்" என்றாள். மங்கை "கும் மோர்னிங் ஸார்" என்றாள். அர்ச்சுனன், அட்டகாசமாகக் கேட்டார்.

"என்னம்மா நீங்க.. காலங்காத்தால வழிமறிச்சுக்கிட்டு? நிற்கறதே நிற்கிறீங்க ஆபீஸுக்கு உள்ளே நின்னு தொலையுங்களேன். வேலை வெட்டி செய்யாட்டியும் பொம்பிளைங்க ஆப்ஸூக்கு உள்ளே இருக்கணும். படிதாண்டி தெருவுக்கு வரப்படாது."

வசந்தா வலது கையால் இடது மணிக்கட்டைத் தடவி விட்டபடி மெளனமாகி நின்றாள். மங்கை, அர்ச்சுனனை மலங்க மலங்கப் பார்த்தாள்.

அர்ச்சுனன், தனது எண்பது கிலோ எடையை குரலில் காட்டினார்.

"என்னம்மா காட்டெருமை மாதிரி நின்னுக்கிட்டு? உள்ளே போங்க இல்லன்னா எனக்காவது வழி விடுங்க, ஐ ஸே... ஒங்களைத்தான். ஒரு கிளாஸ் ஒன் ஆபீசர்கிட்டே நடந்துக்கிற முறையா இது? அட வழி விடுங்கம்மா."

இந்த இரண்டு பெண்கள், பக்கமாய்ப் பிரிந்தபோது, அதிகாரி அர்ச்சுனன். அவர்களுக்கு இடையே புகுந்தார். பத்தடி நடந்துகூட முடித்தார். அந்தப் பெண்கள் நிம்மதி மூச்சு விட்டபோது, அர்ச்சுனன், திரும்பி நடந்து வந்து அதட்டினார்.

'எதுக்கும்மா... இங்கே நிற்கிங்க... பதில் சொல்லுங்க. சொல்றிங்களா.. இல்ல, சொல்ல வைக்கணுமா?"

வசந்தா, வாய் தவறி 'கேன்டீனுக்கு ஸார்' என்று சொல்லி விட்டாள். பிறகு, சொன்ன வார்த்தையை திரும்பப் பெறப் போவதுபோல், உதடுகளைக் குவித்தாள். மங்கை, அவளை எரித்துப் பார்த்தாள்.

அர்ச்சுனன், தலையை முள்ளம் பன்றி மாதிரி உசுப்பிக் கொண்டே, ஒரு சிரிப்புச் சிரித்தார். அது கோபச் சிரிப்பா, சாதாச் சிரிப்பா அல்லது சோதாச் சிரிப்பா என்று அந்தப் பெண்கள் அனுமானிக்க முடியாமல் அல்லாடியபோது, அர்ச்சுனன் ஆணையிட்டார்.