பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

17


செய்துட்டு, போன் செய்திருக்கலாமே. ராம் அண்ட் சீதாவைவிட கோவிந்தா அண்ட் கோ, சீப் ரேட்டுக்குத் தரேன்னு எனக்கு நேத்து நைட்லே போன் செய்தாங்க. அதனால சரக்கை அனுப்ப வேண்டாமுன்னு ராம் அண்ட் சீதாவுக்கு போன் போட்டுச் சொல்லிடு."

"ஸார். சரக்கை இந்நேரம் லாரியில் ஏற்றி..."

"எத்தன பெர்சண்டுய்யா?"

"என்னது ஸார்?"

"ஒனக்குக் கமிஷன் எத்தனை பெர்சண்டுன்னேன்.

"இயல்பிலேயே முன்கோபமும் முரட்டுத்தனமும், போதாக் குறைக்கு நேர்மையும் கொண்ட தண்டாயுதபாணி, அர்ச்சுனனிடம், அதே கேள்வியைத் திருப்பிக் கேட்கப் போனான். அப்போது, அவன் வாய்க்கும், வயிறுக்கும் இடையே கடுமையான போர். இறுதியில் வெற்றிபெற்ற வயிற்றைக் கையால் குத்தியபடியே, அவன் பேசாமல் இருந்தபோது அர்ச்சுனன் அதட்டினார்.

"போய்யா. மொதல்ல சொல்றதைச் செய்... ஒங்களுக்கெல்லாம் மெமோ கொடுத்தால்தான் புத்தி வரும்."

இவரைப்போல், பல்வேறு காரணங்களுக்காக, பலப்பலவான அதிகாரிகளை எதிர்த்துப்பேசி, பல்லுக்கு ஒன்று வீதம் சுமார் முப்பத்திரண்டு மெமோக்களை வாங்கியிருக்கும் தண்டாயுதபாணி, தண்டமான முண்டம்போல் வெளியேறினான். அறை வாசலில் அந்தப் பெண்கள் நீதான் கொடுக்கணும் என்று மசால் தோசையை ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றித் திணித்துக் கொண்டிருந்த போது, இன்னும் இருக்கையில் உட்காராத அர்ச்சுனன், அவர்களை இடித்துக்கொண்டே வெளியே வந்து பி.ஏ. சண்முகத்திடம் கர்ஜித்தார்.

"யோவ்... இன்னுமாய்யா... டில்லிக்கு லைன் கிடைக்கல?"

"இப்போதான் தேர்ட் புளோர். அஸிஸ்டெண்ட் சால்ட் ஆபீசுக்குப் போயிட்டு வர்றேன் ஸார். இன்னும் அரை மணி நேரத்துல ஏ.ஸி. வந்துடுவாராம்."

அர்ச்சுனன் ஏசினார்.