பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பாம்புக் கயிறு


அவன் போன் அவுட் ஆப் ஆர்டர். அதனால வந்துட்டானான்னு பார்த்துட்டு வா. நான் போய்... காதும் காதும் வச்சு முடிச்சுடுறேன். போய்யா... ஏய்யா... ஆந்தை மாதிரி பார்க்கறே? போற வழியில... தண்டாயுதபாணியை வரச் சொல்... அவனும் ஒன்னை மாதிரி ஒரு உதவாக்கரை."

சண்முகம், பரம சாதுவாகி, அவருக்கு ஒரு கும்பிடு போட்டபடியே போனான். சிறிது நேரத்தில், தண்டாயுதபாணி வந்தான். அர்ச்சுனன் கேட்கும்முன்பே பதிலளித்தான்.

“ராம்... அண்ட் சீதாவுக்கு போன் போட்டேன். சரக்கு வேண்டான்னேன். 'லாரில லோட் பண்ணிட்டோம். லோடிங் அண்ட் அன்லோடிங்கிற்கு ஒங்கப்பனா பணம் கொடுப்பான்'னு கத்தறான் ஸார். கடைசியில. எப்படியோ சம்மதிச்சுட்டான் ஸார்."

சண்முகம் பேச்சை, கண் துடிக்கக் கேட்ட அர்ச்சுனன், அவன் காது துடிக்க ஆணையிட்டார்.

"கோவிந்தா அண்ட் கோவைப் பற்றி சரியாய்த் தெரியாது... அதனால தெரியாத அந்த தேவதையைவிட... தெரிந்த இந்த திருட்டுக் கம்பெனியான ராம் அண்ட் சீதா தேவல... இப்பவே சரக்கை அனுப்பச் சொல்லி போன் போடு."

"இந்நேரம்... அன்லோட் செய்திருப்பாங்க ஸார்... வாயில் வந்தபடி திட்டுவாங்களே ஸார்."

அர்ச்சுனன், வாயில் வந்தபடி பேசினார்.

"நான் சொல்றதைக் கேட்கத்தான் நீ இருக்கே. நீ சொல்றதைக் கேட்க நான் இல்ல... வரவர ஒனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகுது. நூற்று நாலு டிகிரி வெயிலடிக்கிற இடத்துக்கு மாத்தினால்... கொழுப்பு கரைஞ்சிடும். போய்யா... போய் போன் போடுய்யா. ஒரு கிளாஸ் ஒன் ஆபீசர் சொல்றேன். நீ பாட்டுக்கு நிற்கிறியே போய்த் தொலய்யா."

ஆஜானுபாகுவான தண்டாயுதபாணி, கூனிக்குறுகி வெளியே வந்து இருக்கையில் உட்கார்ந்தான். எல்லாவித அவமானங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு எதுவுமே நடக்காததுபோல் பேசிக்கொண்டிருந்த அலுவலக ஊழியர்களைக் கோபங் கோபமாய் ஏசினான்.