பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

21


"இந்த ஆசாமி எல்லாரையும் ஆடு மாட்டைப் விரட்டுறதுமாதிரி விரட்டுறான். பெண்டாட்டியைத் திட்டுறது மாதிரி திட்டுறான். யாராவது எதிர்த்துப் பேசுறிங்களா? வரவர நமக்கு மானங்கெட்ட பிழைப்புல ரசனை வந்துட்டுது. என்ன பேச்செல்லாம் பேசறான். யாராவது ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுறிங்களா..."

வசந்தா, எதிர்க் கேள்வி போட்டாள்.

"உங்களை யார் கேட்க வேண்டான்னது? சொல்லப் போனால் ஒங்களைத்தான் அதிகமாய் ஏசுறார்."

"ஏற்கனவே, பல மானேஜர்களுக்கும் எனக்கும் தகராறு. இது கூடயுமா..."

"அப்படியும் நீங்கதானே ஜெயிச்சிங்க? ஒங்க நேர்மை முன்னால நிற்க முடியாமல் ஒரு மானேஜரை... அந்தமானுக்கு மாத்துனாங்க. இன்னொருத்தி திருச்சிக்குப் போனாள். ஒருத்தன் டில்லிக்கு. ஓங்க தைரியம் யாருக்கு ஸார் வரும்? ஆனால் ஒன்று. இந்த மானேஜரை ஒங்களால ஜெயிக்க முடியாது. முடியவே முடியாது. பந்தயத்துக்கு வர்நீங்களா.."

"எவ்வளவு பந்தயம்."

"இருநூறு ரூபாய்."

"மாறப்படாது. அப்புறம் கெட்ட கோபம் வரும்."

"எனக்கு மட்டும் என்னவாம்?"

இதற்குள், உள்ளே இருந்து, "தண்டாயுதம்... தண்டாயுதம்" என்று அர்ச்சுனக்குரல் இடி முழக்கமிட்டது. தண்டாயுதபாணி, தன் சகாக்களை வீறாப்பாய்ப் பார்த்தபடி, "இன்னைக்கு 'அதை' எப்படிக் கேட்கப்போறேன். பாருங்க. உங்களுக்குக் கேட்கும்படியாய் கேட்கப்போறேன் பாருங்க.." என்று சவாலிட்டபடியே உள்ளே போனபோது, சகாக்கள் கலக்கத்தோடு நின்றார்கள். ஏனென்றால், இந்த தண்டாயுதபாணி கோபம் வந்தால் கை வைக்கவும் தயங்காதவன். மங்கை பந்தயம் போட்ட வசந்தாவை முறைத்தாள். மீனா, பியூன் ஏகாம்பரத்தை. அர்ச்சுனன் அறைக்குள் போய். அசம்பாவிதத்தைத் தடுக்கும்படி சைகை செய்தாள்.