பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பால் பயணம்

அந்த நகரத்தின் பிரதான வீதியில் கலக்கும் குறுக்குச் சந்து மூலையில், காய்கறிகளைப் பேரம் பேசியபடியே தராசில் அள்ளிப் போட்டவளை, சம்பந்தம் சற்றுத் தொலைவில் நின்றபடி நோட்டம் போட்டார். அவர் போட்ட கணக்கில் ‘தேறுகிறவள்’ போல் தெரிந்தாள்; ஆகையால் - சம்பந்தமும் அந்தக் கடைக்குப் போனார்.

“உருளைக் கிழங்கு கிலோ என்னப்பா...? அவங்களுக்குக் கொடுக்கிற மாதிரியே எனக்கும் கிழங்கு இருக்கணும். அவங்க கொடுக்கிற காசுதான் நானும் கொடுப்பேன்...”

காய்கறிக்காரர் மட்டும் அவளைப் பார்க்கவில்லை. அவளும் பார்த்தாள். சிறிது அழுத்தமாகவே பார்த்தாள். பிறகு லேசாய்ச் சிரித்துக் கொண்டாள். சம்பந்தத்திற்கு கிளுகிளுப்பாகியது. சிவப்பு, வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட டி-சட்டையை இழுத்து விட்டுக்கொண்டார். கைக்குட்டையை எடுத்து முகத்தை முழுமையாகத் துடைத்துக் கொண்டார். இதற்குள், கடைக்காரர் அரைக்கிலோ உருளைக்கிழங்கை காகிதப் பையில் போட்டு அவரிடம் நீட்டினார். ஹோட்டலில் சாப்பிடும் அவர், அதை வாங்கிக்கொண்டு, ஸ்டைலாக சைட் பாக்கெட்டிற்குள் கையை விட்டுப் பத்து ரூபாயை நீட்டினார். காய்கறிக் கடைக்காரர். அங்கே இருப்பவர்களிடம் சில்லறை கேட்டார். எல்லோரும் கை விரித்ததும், பக்கத்தில் இருந்த வாடகைச் சைக்கிள் பையனிடம் பத்து ரூபாயை நீட்டி, சில்லறை கேட்டார். அவன் மெயின் பஜாருக்குள், டவுசரைக் கைகளால் தட்டியபடி, நிதானமாகப் புறப்பட்டான். வலக்கையில் தூக்குப் பையைப் பிடித்தபடி, சம்பந்தத்தைச் சம்மதமாய்ப் பார்த்தபடியே நடந்தாள். பிரதான வழியில் நின்றாள். எவருக்கோ காத்து நிற்பதுபோன்ற தோரணை.