பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

25


'தேறாதவளாக' இருந்தால், இந்நேரம், மடமடவென்று நடந்திருப்பாள். இல்லையானால் சாலையைக் குறுக்காய் கடந்து எதிர்ப்புக்கம் சென்று, நடந்திருப்பாள். கொஞ்சம் திமிர் பிடித்தவளாய் இருந்தால், காறித் துப்பியிருப்பாள். ஆனால் இவளோ காறவும் இல்லை. துப்பவும் இல்லை. நடையை மாற்றவும் இல்லை.

சம்பந்தம், அவளோடு சமபந்தப்பட்டவர்போல், இப்போது அவளுக்கு இணையாக நடந்தார். "நான் நடக்கிறேனாக்கும்" என்பதுபோல், கால் செருப்பைத் தரையில் தேய்த்தார். அவள், அவரைத் தோளுக்கு நேராய்ப் பார்த்தாள். பிறகு, சர்வசாதாரணமாய் நடந்தாள். சம்பந்தத்திற்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. நாட்டுக் கட்டைதான். ஆனால் கீரைத்தண்டு மாதிரி நிறமும், உடல்வாகும் உள்ளவள். அவர் காதளவு உயரம். அவருக்குப் பிடித்தமான சுருட்டை முடி சரியாமல், செழுத்த மார்பகம். ஏதோ ஒருவிதமான கிறக்கப் பார்வை.

சம்பந்தம், அவளிடம் பேச்சுக் கொடுக்கப் போனார். அவர் வாயெடுக்கும்போதுதான், எதிரே சைக்கிளோ. மக்கள் கூட்டமோ வரும். ஆனாலும் அவர் தளரவில்லை. மோதுவது மாதிரி ஒரு சைக்கிள் அவர்களைக் கடந்தபோது "சீ. ரோட்டைக் குத்தகைக்கு எடுத்தவன் மாதிரி போறான் பாரு" என்று பொதுப்படையாகப் பேசினார். அவள், அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தொலைவில்போன சைக்கிள் காரனையும் பார்த்துவிட்டு நிதானமாக நடந்தாள். பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவருக்கு மகிழ்ச்சி. ஆள் இல்லாத இடமா என்று திரும்பிப் பார்க்கிறாள். சபாஷ்...!

சம்பந்தம், அவளை இடிப்பதுபோல் நடந்தபடியே, "எதுவரைக்கும் போறாப்போல?" என்றார். அவள் பதில் சொல்லாமலே நடந்தாள். அதை மெளனச் சம்மதமாக எடுத்துக்கொண்டு, "ஒன்னைத்தாம்மா... பதில் சொல்லப்படாதா?" என்றார்.

அவள், நடைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நின்றாள். அவரை ஏற இறங்கப் பார்த்தாள். சம்பந்தம், சந்தோஷம் தாங்க, முடியாமல் மேலும் ஏதோ பேசப்போனபோது, அவள் வெடித்தாள். அவரைப் பொறுத்த அளவில், அது அணுகுண்டு, ரசாயன ஆயுதம், கண்ணி வெடி.