பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

27


வீதியில், பல பேர் முன்னால் அடிபட்டு, பத்திரிகைகளிலே பெரிய பெயராய் வாங்கி... சீசி... இவளெல்லாம் குடும்பப் பெண்ணா... இஷ்டமில்லேன்னா எதிர்பக்கமாய்ப் போக வேண்டியதுதானே... அய்யோ... சைக்கிள்... அவள் இருக்கிற சைக்கிள்...

சம்பந்தத்திற்கு, அந்த மூடுபனி உச்சி வெயிலாகியது. அந்த ஓட்டம் உயிரோட்டமாகி விட்டது. அந்தச் சாலையில் என்னதான் ஓடினாலும் தப்பிக்க முடியாது. என்ன செய்யுறது... ஒரு சின்னச் சந்துகூட இல்லாமல் போயிட்டதே. சந்து சந்தாய்க் கிழிச்சுடுவானே...

ஓடிய சம்பந்தத்தின் கால் இடறியது. அந்த வேகத்தில் கீழே விழுந்தவர் கையை ஊன்றி எழுந்து நிமிர்ந்தார். என்னது... கிளினிக்...

சம்பந்தம் அந்த சாலையோரக் கிளினிக்கின் படிகளில் ஏறி உள்ளே போனார். பரபரப்பாய்-படபடப்பாய் அதற்குள் ஓடினார். எவரும் அவரைப் பார்த்து ஆச்சரியப்படவில்லை. கம்பவுண்டரிடம் குட்டுப்படும் ஒரு சின்னப் பையன்தான் அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தான். சைக்கிளில் போகிறவர்களுக்குத் தெரியக்கூடிய நாற்காலி. சம்பந்தம் அந்த நாற்காலியைத் தூக்கிக் கொண்டே ஓடினார்... ஓடினார்... அந்த அறையின் ஓரத்திற்கே ஓடினார்...

அரைமணி நேரம் ஆடியடங்கி விட்டது. சம்பந்தம், ஓரளவு நிதானத்திற்கு வந்தார். எப்படியாவது சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்காக எழுந்தார்... எழுந்த வேகத்திலேயே அமர்ந்தார்... ஒருவேளை அந்தச் சைக்கிள்காரன் வெளியே காத்து நின்றால்... உள்ளே வந்தால் தன்னை அடிப்பது தடைபடலாம் என்று நினைத்து வெளியே காத்திருந்தால்...

சம்பந்தம் கூனிக்குறுகி உட்கார்ந்தார்... நடந்ததற்கு வருத்தப்படுவதுபோல் தலை குனிந்தார். அது "ஜானகி நகுவாள்" என்று ராவணன் வருத்தப்பட்டானாமே. அதுபோல் அந்தஸ்தைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ கவலைப்படாத வருத்தம். அவள் கேட்ட கேள்வியைச் சுற்றி வந்த வருத்தம். அவரது பால்பயணத்தில் இப்படிப்பட்ட பல கசப்பான அநுபவங்களும் கிடைத்ததால், அவரது பலவீனமும் தொடர்ந்தது. ஆனால் இன்று ஏற்பட்டதோ கொடிய