பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பால் பயணம்


அநுபவம்.... கொடூரமாகப் போகவிருந்த அனுபவம். இப்படி இதுவரை நாய் மாதிரி நடுரோட்டில் ஓடியதில்லை. அப்படி ஓடியதுகூடப் பாதகம் இல்லை. ஆனால் என்னமாய்க் கேட்டு விட்டாள். 'கிழட்டுப் பயலாமே... இந்த ஐம்பத்தைந்து வயது ஒரு கிழடா... இல்லை. ஒருவேளை நான் கிழவன்தானோ... இதனால்தான் நான் எந்தப் பெண்ணோடவாவது சரசமாக நடக்கும்போது, சிலர் சிரிப்பார்களே... அந்தச் சிரிப்புக்களுக்கு எனக்கு வயதாகி விட்டது என்று அர்த்தமோ?

சம்பந்தத்தின் தலை, தரையைத் தொடப்போதுவது போல் தொங்கியது. நாற்காலியில் இருந்து கீழே விழப் போகிறவர்போல் இருந்தவரைக் கிளினிக் பையன் உசுப்பினான். அவர் கையிலேயே ஒரு டோக்கனைத் திணித்தபடியே கூறினான்.

'உள்ளே டாக்டர்கிட்டே போங்க ஸார்...

'இல்லப்பா, எனக்குச் சரியாயிட்டு... வெளியே போறேன்...

'இப்படித்தான், மொதல்ல வரும்; முளையிலேயே கிள்ளிவிட்டால் நல்லது... எங்க டாக்டர் கைராசி டாக்டர். போங்க ஸார்."

சம்பந்தம், காலத்தை வீணாக்குகிறார் என்பதுபோல், அவருக்குப் பிறகு உள்ளவர்கள் எரிச்சல்பட்டுப் பார்த்தார்கள். அவரும் யோசித்தார். இவ்வளவு நேரமும் இங்கே உட்கார்ந்ததுக்கு, வாடகைப் பணம் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டுப் போகலாம்... அதோடு பத்து நாளாய் லேசாய் வயிற்று வலி வந்து போகுது...

டாக்டரின் அறைக்குள் நுழைந்த சம்பந்தத்திற்கு, அந்த அறை வித்தியாசமாகப்பட்டது. வழக்கம்போல் தலையைத் தொங்கவிட்டபடிதான் டாக்டர்கள் எதையோ கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த டாக்டர் நிமிர்ந்து இருக்கிறார். சற்றுத் தள்ளிச் சின்ன மடிப்புக்கூட இல்லாத ஒரு பட்டு மெத்தைக் கட்டில். அதன் விளிம்பு படும் சுவரில் ஐந்தடிக்குமேல் பல்வேறு வட்டக் கோடுகள்... ஒரு வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம். மையத்தில் ஒளிப்பந்தம் போன்ற செஞ்சுடர்... டாக்டர் நாற்காலிக்கு எதிரே ஏழெட்டு பேர் உட்காரும்படியான சோபா செட் என்ன இதெல்லாம்...?