பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

31


சம்பந்தம், வீறிட்டார்.

"கடைசில சொன்னதுதான் டாக்டர்.... கரெக்ட்... கடைசில சொன்னதுதான்... விவரம் தெரிந்த நாளில் இருந்தே, என் மனசில் ஒரே ஒரு எண்ணந்தான். ஏப்போதும் ஏதோ ஒரு பெண்ணோடு இருக்க வேண்டும்... முத்தமிட்டபடியே முழு நாளையும் கழிக்க வேண்டும். கனவுகள்கூடக் காதல் - காதல் கதைகளாய், கூடல் கதைகளாய்த்தான் வரும். காலையில் எழுந்தவுடனே முதல் சிந்தனையே ஏதாவது ஒரு பெண்ணைப் பற்றித்தான் இருக்கும். எந்த அலுவலகத்திற்குப் போனாலும், முதலில் ஆபீஸரைப் பார்க்க வேண்டிய நான் அங்கே இருக்கிற பெண்களைத்தான் பார்ப்பேன் டாக்டர்! அப்படிப் போன ஒரு நிமிஷத்திற்குள்ளே, எந்தப் பெண்ணாவது, இன்னொரு ஆடவனிடம் பேசி விட்டால், நான் இருக்கும்போது அவள் எப்படிப் பேசலாம் என்பது மாதிரியான பேயெண்ணம் வரும்.

"பன்னிரண்டு வயசுல இருந்து இந்த ஐம்பத்தைந்து வயசு வரைக்கும். மூச்சு எப்படி நிரந்தரமாய் இருக்குதோ அப்படிப் பெண் பித்தே எனக்கு மனம் முழுதும் வியாபித்து விட்டது டாக்டர்... காலையில டி சாப்பிடப் போகும்போது... ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் பின்னால் டி சாப்பிடாமலே போவேன். ஆபீஸுக்கு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கிறதுக்காக, அவசரமாய்ப் போகும்போதுகூட வழியில் ஒருத்தி, ஓரிடத்தில் தெரிந்தால், அவளை நினைச்சு ஆபீஸை விட்டுடுறேன் டாக்டர். வெளியூருக்கு ஆபீஸ்ல இருந்து அனுப்பும்போதுகூட, அங்கே பெண்கள் கிடைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்போடு தான் போவேன் டாக்டர். பஸ் நிலையத்திலேயே ஒருத்தி கிடைத்துவிட்டால் பயணத்தை விட்டுடுவேன் ஸார். இப்போகூட ஒருத்தியை 'ஃபாலோ' செய்தேன். அவள் ரெளடி துரத்தினாள். அவளுக்குப் பயந்து ஓடி ஒளியத்தான் இங்கே வந்தேன் டாக்டர். பெண் பித்தனாய்ப் போயிட்டேன் டாக்டர்... நண்பர்கள் மனைவிகளைக்கூட தப்பாய் நினைத்து நினைத்து பெண் லோலனாய் ஆயிட்டேன் டாக்டர். ஒரேயடியாய் உதவாக்கரையாய்.... மனித மிருகமாய்ப் போயிட்டேன் டாக்டர் என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க டாக்டர்."