பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

உப்பைத் தின்னாதவன்


வேதமுத்து, மனைவியை கையெடுத்து கும்பிட்டபடியே எழுந்தான்...

மறுநாள், இரண்டாம் சனி... அப்புறம் ஞாயிறு... திங்கட் கிழமை அரசாங்கமே 'பந்தாடிய' விடுமுறை.

செல்வாய் கிழமை, மனைவி நீட்டிய சாப்பாட்டுப் பொட்டலத்தை (பராஸ் சண்முகத்திடம் கொடுத்திடணும்... ருசி தெரியாமலேயே சாப்பிடுறவன்) பயபக்தியாய் வாங்கி, தூக்குப் பையில் போட்டுக்கொண்டு, பஸ் நிலையம் நோக்கி நடந்தான். வெயில் சுட்ட சூட்டில் அடுத்த மாதமாவது தவணை முறையில் ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். கால் சுட்டாலும், மனம் குளிர்ந்தது. ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிவிட்ட தலை நிமிர்வு. மனம் பூரணப்பட்ட பெருமிதம்.

வேதமுத்து, அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக பழைய ஆபீஸருக்கு தான் செய்த பரோபகாரத்தை எல்லோரிடமும் சொல்லப்போனான். பிறகு காலையிலேயே சண்முகத்திடம் சொன்னதை மீண்டும் சொல்வது தற்பெருமையாகி விடும் என்றும் எண்ணினான். இந்த சண்முகம் நல்ல செய்திகளைச் சொல்ல தவறியதே இல்லை. இவனே சொல்லியிருப்பான் என்று நினைத்து, குவிந்த உதடுகளை உள்பாய்ச்சிய படியே அவனைப் பார்த்து அர்த்தம் அர்த்தமாய் சிரித்தான். இந்த சண்முகம் இவனுக்கு பெஸ்டிவல் அட்வான்ஸ் வந்திருப்பது தெரிந்து, காலையிலேயே இவன் வீட்டுக்கு கடன்படை எடுத்தான். அடுத்த வாரம், ஏதோ ஒரு கிறிஸ்த்துவ பண்டிகையை கொண்டாடுவதற்கு தான் கேட்டு இருக்கும் அரசாங்க அட்வான்ஸ் வந்துவிடும் என்றும், அதுவரைக்கும் நூறே நூறு ரூபாய் தரும்படியும் கேட்டான். வேதமுத்து பதில் சொல்வதற்கு முன்பே அவன் மனைவி தேநீர் டம்ளரை நீட்டியபடியே விளக்கினாள். பணம் போன காரணத்தையும், கணவனின் தயாள குணத்தையும் விளக்கும் வகையில் பெருமை பிடிபடாமல் பேசினாள். இறுதியில் சண்முகத்திற்கு கைவிரிக்க வேண்டியிருக்கிறதே என்று குரலை வருத்தத்தோடு முடித்தாள்.