பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்நாட்டு மன்னர்கள்


திரிசூலம்போல், மூன்று சாலைகள் சந்திக்கும் கூட்டுரோடு. கிழக்கு-மேற்காகச் சென்ற தேசிய சாலையில் இருந்து கிளைவிட்டு, தெற்கு நோக்கிச் செல்லும் சாலை பிரிவதால் ஏற்பட்ட அரைக்கோணம் போன்ற பகுதியில் நான்கைந்து டீக்கடைகள்,

ஒவ்வொரு கடையிலும், உரிமையாளருக்கு இஷ்டப்பட்ட அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம், சின்னா பின்னமாக காட்சியளித்தன. வாசல்களுக்கு இருபுறமும் தேர்தல் தட்டிகள். சுவர்களில் போஸ்டர்கள். கடைகளுக்குள்ளே, கூரைப்பகுதியில் கட்சிக் கொடிகளின் தோரணங்கள்.

அந்த கூட்டு ரோட்டின் கிழக்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் இரண்டு சின்னஞ்சிறு கிராமங்கள். அவற்றை மறைப்பதுபோல், புளியமரங்களும், ஆல மரங்களும் நெருங்கி நின்றன.

இங்கே, சாலைகள், கூட்டணி வைத்து பிரிவதுபோல், அரசியல் கூட்டணிகளின் தேர்தல் கால அலுவலகங்களாகச் செயல்பட்ட இரண்டு ஒலைக் கொட்டகைகள். ஒன்று வடமேற்கிலும், இன்னொன்று தென்கிழக்கிலும் இருந்தன. சாலைகள்தான் கூடுமே அன்றி. மனிதர்கள் அல்ல என்பதுபோல், இந்த ஒலைக் கொட்டகைகளில் இருந்து. மைக்குகள் அலறின. பக்கத்து டவுனில் இருந்து வரவழைக்கப்பட்ட வாடகைத் தலைவர்கள், மைக்குகள் மூலம் வாயில் வந்ததையெல்லாம் தத்துவங்களாகவும், வாக்குறுதிகளாகவும், உளறல்களின் உருவங்களாகி, ஒலிவடிவங்களாக முழங்கினர்.

ஆரம்பத்தில், 'லாவணி' மாதிரி போட்டி கோஷங்கள் முழங்கினர். ஒருவர் நிறுத்தியதும். இன்னொருவர் பேசுவார் கொட்டகையையே. மனித உருப்பெற்று பேசுவதுபோலவும், அதன் வாசலே, வாயாகப் போனது போலவும் தோன்றும்.