பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

காவலாளி


இரட்டைப் படுக்கை அறை, ஒப்பனை அறை, குளியலறை, கழிவறை என்று பஞ்சபாண்டவ அறைகளைக் கொண்டது.

ஒவ்வொரு நாளும், அமைச்சரோ அல்லது ஆட்சித் தலைவரோ வருவார்கள் என்ற அனுமானத்தில் சுத்திகரிக்கப்படும் அறை. மேற்கு அறை, ஒற்றை அறையிலியோ ஒப்புக்கு ஒரு கழிவறை, படுத்தால் கத்தும் மெத்தைக் கட்டிலையும், மூளியான நாற்காலி மேஜைகளையும் கொண்ட அறை...

கதிர்வேலு, திறந்துவிட்ட அந்த அறைக்குள் அவனை ஏற இறங்க பார்த்தபடியே உள்ளே போனார்.

அந்தச் சமயம் பார்த்து மின்சார விளக்குகள் வெளிச்சம் போட்டன... அவருடன் உள்ளே போன ஒட்டடைக் கம்பன் ஒரு போடு போட்டான்.

"அய்யா, எலக்ட்ரிசிட்டிகாரனை விரட்டுன விரட்டுல லைட்டு வந்துட்டு பாருங்க... அவனுகளுக்கு தெரியாதா என்ன... அய்யா, சொல்கிறபடி செய்யணுமே தவிர, செய்யுற படி சொல்லக் கூடாதுன்னு, எவனுக்கு தர்மபுரிக்கோ, ராமநாதபுரத்துக்கோ போக மனசு வரும்..."

"ஆக்கத் தெரிஞ்சவனுக்கு அழிக்கவும் தெரியுண்டா மடையா..."

அவருக்கு ஏற்பட்டிருக்கும் கோபம், புரியாமலே, கதிர்வேலு வெள்ளைத் துணிகளை சுருக்கிக் கொண்டு, சமையல் கூடத்திற்கு போய் புதிய துணிகளை மெத்தையில் பரப்பினான். தலையணை உறைகளை கழற்றிவிட்டு, கையோடு கொண்டுவந்த புதிய உறைகளுக்குள் அவற்றை திணித்துக் கொண்டிருந்தான். அப்போது-

வெளியே போன ஒட்டடைக் கம்பன், காருக்குள் இருந்த ஒருத்தியுடன் உள்ளே வந்து அவளை விட்டுவிட்டு, வெளியேறிவிட்டான். அவளோ கதிர்வேலை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல பார்த்தபடி கட்டிலில் மல்லாக்க சாய்ந்து, தலையனையை செங்குத்தாக வைத்து அதில் தலையைச் சாய்த்தாள். சந்தேகமில்லை... 'அவளே'தான். பல மேடைகளில் அவரோடு, 'வெண்டையாகப்' பேசுகிறவள். அவருக்கு வரும் விண்ணப்பங்களை வாங்கி வகைப்படுத்துகிறவள்.