பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

75


"மிஸ்டர் சிங்காரம்! நீ ரொம்பத்தான் பேசுற"

"மிஸ்டர் சதாசிவம்! இங்க நீங்க மானேஜர் இல்ல. ரைட்டர். நான் அக்கெளண்டண்ட் இல்லே. டைரக்டர். டோண்ட் பீ ஸில்லி"

"வார்த்தையை அடக்கிப் பேசு. இந்த மாதிரி டைரக்‌ஷன் பண்ணியிருக்கியே. இதைவிட நீ எருமை மாடு மேய்க்கலாம்."

"எருமைமாடு எழுதின ஸ்கிரிப்டைவிட, டைரக்‌ஷன் எவ்வளவோ மேல்."

"டேய் என்னடா நினைச்சிக்கிட்டே?”

"டாய். என்ன நினைக்கணுங்றடா?"

"இப்படி பேசினா பல்லை உடைப்பேன்"

"இதோ நானே உடைக்கிறேன் பாரு."

ஊழியர்கள், இருவரையும் விலக்கிவிட்டார்கள். பிறகு இரண்டு கோஷ்டிகளாகி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டார்கள். நாடகம் போடாமலே அங்கே சண்டைக் காட்சிகள் நிறைந்த நாடகம் ஒன்று தத்ரூபமாக அரங்கேறியது.

விவகாரம், மானேஜிங் டைரக்டருக்கு மட்டுமல்ல பத்திரிகைகளுக்கும் போனது. சமயம் பார்த்து கொண்டிருந்த எம்.டி. சதாசிவத்தையும், சிங்காரத்தையும் 'சஸ்பென்ஷனில்' வைத்திருக்கிறார். அனேகமாக இருவருக்கும் டிஸ்மிஸல் ஆகும் என்கிறார்கள்.

கடற்கரையில் கண்ணகி சிலைக்கருகே உள்ள பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு மனோதத்துவ புத்தகம் ஒன்றில் ஒரு பக்கத்தை விழுங்கி விடுபவன்போல், அக்கெளண்டண்ட் சிங்காரம் படித்துக் கொண்டிருந்தான்.

"உலகத்தில் எல்லோருமே ஒரே மாதிரி குண இயல்பு உள்ளவராய் இருந்தால், கலகந்தான் மிஞ்சும். ஒருவர் தன்னிடம் இருக்கும் குறைகளை, பிறரிடம் காணும்போது, அவரை வெறுக்கிறார்.