பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

முதிர்ந்தவர்

வயது முதிர்ந்த ஒருவருக்கு ஓர் ஆசை வரக்கூடாது. எப்படியோ வந்து விட்டது. அதாவது, இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த. ஆசை. இதைப் பற்றித் தன்னுடைய மனைவி மக்களிடம் பேச முடியுமா? அப்படிக் கலந்து பேச வேண்டுமென்றால் நண்பரிடத்தில்தான் அவர் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவருக்குச் சமமான வயதுள்ள அடுத்த தெருவிலுள்ள நண்பரிடம் சென்றுதான் தன் கருத்தைத் தெரிவிப்பார்.

இந்தக் குறிப்பினை வைத்துச் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது நட்பு என்பதற்கு உள்ள தனிப் பெருமையை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆதலால்தான் தாயுமானவ சுவாமிகள் இறைவனுக்கு விளக்கம் சொல்லுகின்ற பொழுது, "நாதனை நாதாதீத நண்பனை... என்று பேசினார்.

தேவாலயம்

வழிபாடு செய்கின்ற பொழுது மனதில் உள்ளதை யெல்லாம் அப்படியே திறந்து பேசுகின்ற இடமே 'தேவாலயம்' என்று சொல்லுவார்கள். எப்படிப்பட்ட வழிபாடும் நற்பயனைத் தந்தே தீரும், வழிபாடு செய்தால் பயனில்லாமல் போகாது. திருவள்ளுவர் சொல்லுவது போல் மனத்தினை மாசு இல்லாமல் வைத்துக் கொண்டு வழிபாடு செய்தல் வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்ற இந்த நான்குமே மனத்தில் தோன்றுகின்ற பல்வேறுபட்ட தீய எண்ணங்களுக்கு மூலகாரணமாக இருப்பவையாகும்.

'சாக்கடையில் ஊற்றிய அமிர்தம்' என்று சொல்வது போல, அழுக்குள்ள மனதை வைத்துக்கொண்டு வழிபாடு செய்தல் பயனற்றுப் போகும்.