பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

நூல்களின் சிறப்பு

நமது முன்னோர்கள் நூல்களை எதற்காக எழுதினார்கள் என்றே நமது மக்களில் பலர் புரிந்து கொள்ளவில்லை. இராமாயணத்திலே ஒரு பத்து பன்னிரெண்டு செய்திகள், பாரதத்திலே ஒரு பத்து செய்திகள், பெரிய புராணத்திலே, திருவிளையாடற் புராணத்திலே ஒரு பத்து பன்னிரெண்டு செய்திகள்... திருவள்ளுவர் போன்று, ஒளவையார் போன்று, இராமலிங்க சுவாமிகள் போன்று, நேருக்கு 'நேரே சொன்ன செய்திகள்... அவற்றைக் காட்டிக்காட்டி இந்த மக்களைத் திருத்துங்கள் என்பதற்காகத் தானே!

"துரியோதனன் செத்து விட்டான்...பார். ராமனைப் பார்... கர்ணன் கொடையாளியாய் இருந்தான்...பார்”. என்று அவர்களையெல்லாம் ஏன் சொல்லி வைக்கிறோம்? நாமே சொன்னால் கேட்க மாட்டார்கள் என்று தான் “அவனைப் பார்', 'இவனைப் பார்' என்றோம்.

மனிதன் உயர்ந்த பிறவியைப் பெற்றிருக்கிறான். உண்பதால் மட்டும் மனிதன் உயர்ந்தவனாகி விட மாட்டான். பசுமாடும் தான் புல்லைத் தின்கிறது. தின்பதால் மட்டும் அது உயர்ந்த பிறவியாகி விடுமா?

ஆசைக்கு அளவு

மனிதன் ஆசை வைக்கக் கூடாதவை இரண்டு. ஒன்று, தூக்கம்; இன்னொன்று சோறு; இவை இரண்டிலும் எப்போதும் ஆசை வைக்கக் கூடாது. இவையிரண்டையும் வேண்டாம் என்று சொல்லவில்லை. இதே வேலையாய் இருக்கக் கூடாது. சில பேர் இதே வேலையாகவே இருப்பார்கள், தூங்குவது, சாப்பிடுவது; சாப்பிடுவது, தூங்குவது.... அவர்கள் தேரவே மாட்டார்கள்.

தூக்கத்தைச் சுகமென்று சொல்லக் கூடாது, தூக்கம் நம்மை மீறி வந்தால் தான் படுக்க வேண்டும்..