பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

உலகத்தை ஆட்சி செலுத்துகின்றன. இந்த ஐந்தும் .உலகத்தையே அழிக்கவும் கூடியவை. யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. புயல் அடிக்கிறது. யாரிடமாவது கேட்டுக்கொண்டா அடிக்கிறது? அதுவாகவே அடிக்கிறது. பெரிய சேதங்களை உண்டாக்குகிறது. அதே காற்று தென்றலாக வருகிறது. மகிழ்ச்சியை அளிக்கிறது. இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கைக்கென்றே ஒரு சக்தி இருக்கின்றது.

அந்த இயற்கைச் சக்தியை எவராலும் மீற முடியாது. யாராலும் தடுக்க முடியாது. அந்த இயற்கை நம்மோடு ஒத்துழைக்கவேண்டும். ஒத்துழைக்காமல் இயற்கையின் சக்தி மீறி விட்டால் நமக்கு ஏற்படக்கூடிய அழிவு, துன்பத்திற்கு அளவேயில்லை, அதனால் தான் திருவள்ளுவர்கூட மழையைப்பற்றிப் பேசும் பொழுது “மக்களுக்கு நன்மை செய் வதும் மழை தான், கடைசியில் கெடுதி செய்வதும் மழை தான்...' என்றார்.

மழையும் இயற்கையும்

“கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை" [15]

என்றார். இந்த இடத்திலே மழை ஒன்றை மட்டுமே நாம் நினைக்கக் கூடாது. பொதுவாக இயற்கைச் சக்தியை நாம் போற்றி, பாராட்டி வணங்கி வாழ வேண்டும். இயற்கையைப் புறக்கணித்தால் மனிதன் வாழமுடியாது.

செய்யும் தொழிலில் ஓர் இயற்கைச் சக்தி இருக்கிறது. அதற்கு நீ பயப்பட வேண்டாம், ஆனால் நீ அந்தத் தொழிலுக்குத் துரோகம் செய்தால் நீ வாழ முடியாது. மற்றவன் உன்னை வாழவைக்க முயற்சித்தாலும் அந்தத் தொழில் உன்னை அழித்துவிடும்,