பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

வாசிக்கின்ற இசைக் கருவிகள் அனைத்தையும் குறித்து நின்றது. இசைக் கருவிகளையெல்லாம் இரண்டாகப் பிரித்தால், ஒன்று குழல் என்பதிலே அடங்கும். மற்றொன்று, யாழ் என்பதிலே அடங்கும் என்பதால், 'குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்று சொன்னார்.

ஆதலாலே தான் மழலைச் சொற்களின் இனிமையை எவ்வளவு அழகாக வேறு ஆசிரியர்கள் எடுத்துச் சொன்னாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகத்திலே மனிதன் அடையக் கூடிய இன்பங்களிலே ஒரு வகைதான் மழலைச் சொற்களினால் அனுபவிக்கிற இன்பம், குழந்தைகளால் ஏற்படும் இத்தகைய இன்பத்தை நுகர்வதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நுகரத் தெரியாதவர்கள்

இன்பம் அனுபவிப்பதற்கு எல்லா வசதிகளும் இருந்தாலும் அந்த இன்பத்தை நுகர்வதற்குத் தெரியாத மனிதர்களும் இருப்பார்கள். திருவள்ளுவர் சொல்கிறார்: “ஈத்து உவக்கும் இன்பம்'. ஈத்து உவக்கும் இன்பம் என்றால் 'பிறருக்குக் கொடுத்து அதனால் இன்பத்தை அனுபவிப்பதற்கு நீ கற்றுக் கொள்ள வேண்டும்' என்று சொல்கிறார்.

ஒரு பிச்சைக்காரன் வருகிறான். அவன், 'பசியெடுக்குது... சாப்பிட்டு நாலு நாளாகுது' என்று சொல்கிறான். அவனுக்குக் கொஞ்சம் பழையது போடுகிறோம்; நீ கொடுக்கிற அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டு அவன் முகமானது கொஞ்சம்மலர்ச்சியடையும்.... அப்பாடா என்று, அப்பொழுது அதைப் பார்த்து நீ மகிழ்ச்சி யடையணும்; என்பார். அது தான் ஈத்து உவக்கும் இன்பம் ஏன்கிறார், “சனியன் தொலையடா... என்று திட்டிக் கொண்டு போடக்கூடாது.