பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

கடன் வாங்கியவன்

ஒரு கூட்டத்திலே நான், 'பிறக்கும் போது அழுது கொண்டே பிறந்தோம்... இறக்கும்போது சிரித்துக் கொண்டே இறக்க வேண்டும்' என்ற இந்தக் கருத்தை நன்றாக விளக்கம் செய்துவிட்டு வந்தேன். ஆறு மாதங்கள் கழித்து மறுபடி. அந்த ஊருக்குப் போனேன், அங்கிருந்தவர்கள் எல்லாம் என்னைப் பார்க்க வந்தார்கள். 'ஐயா, ஒரு செய்தி' என்றார்கள், 'என்ன?' என்றேன். நீங்கள் சொல்லிவிட்டுப் போனீர்களே; அதே மாதிரி எங்க ஊரிலே ஒருத்தர் சிரித்துக்கொண்டே செத்தார் என்று சொன்னார்கள்.

"அப்படியா, நாட்டுக்கும் மக்களுக்கும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் இவ்வளவு சேவை செய்தவராய் இருந் திருந்தால் என் போன்றவர்களுக்கு அவர் பெயர் தெரிந்திருக்க வேண்டுமே, யார் அந்த மகான்...எதற்காகச் சிரித்துக் கொண்டே. செத்தார்?" என்று ஆவலுடன் கேட்டேன். அவர்கள், "அவர் சிரிச்சுக்கிட்டு செத்ததுக்கு வேறு காரணம்....பத்து பேரிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தராமலே இறந்து போனாரு. அவர்களை ஏமாற்றிவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே செத்தான் என்றார்கள்.

இதைக் கேட்டு நான் சிரித்தேன்!