பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

பத்து தடவை

நடைமுறையிலே "ஒரு தடவைக்கு பத்துத் தடவை சொன்னேனே? அப்படிச் சொல்லியும் சரியாக நீ செய்ய வில்லையே?" என்று பேசுவதை நாம் பார்த்து வருகிறோம், ஒரு தடவை சொல்ல வேண்டிய புத்திமதியைப் பத்துத் தடவை சொல்வது நல்லதென்று தெரிகிறது. பத்துத் தடவை சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதற்குச் சட்டமாக எதுவும் இல்லை என்றாலும் பழங்காலத்திலிருந்து 'ஒரு தடவைக்குப் பத்து தடவை சொன்னேன்' என்று பேசுகின்ற பழக்கம் சிந்தனைக்கு உரியதாகும்.

இந்த முறையை முதல் முதலாக உ.ண்டாக்கியவர் திருவள்ளுவர் என்றே சொல்ல வேண்டும். திருவள்ளுவர் ஒவ்வொரு அறமாகிய பண்பாட்டினையும் பத்து தடவை சொல்லி விளங்க வைக்கின்றார்.

திருக்குறளில், 133 அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறட்பாக்களைக் கொண்டிருக்கிறது. அதாவது, திருவள்ளுவர் தாம் எடுத்துக் கொண்ட கருத்தினைப் பத்து தடவை விளக்கம் செய்கின்றார்.

ஒரு கருத்தினைப் பத்துத் தடவை தெளிவாக விளக்கிவிட்டால், படிப்பவர் உள்ளத்தில் நன்றாக ஆசிரியர் சொல்லுகின்ற இந்த விளக்கங்கள் பதிந்துவிடும் என்பது குறள் ஆசிரியரின் கருத்தாக இருந்திருக்கலாம்.

இன்றைய தினம் நடைமுறையில் காணுகின்ற -- பேசப்படுகின்ற சில முறைகளைக் காணுகின்ற பொழுது, குறட்பாக்களின் கருத்துக்கள் எப்படியோ மக்களின் பழக்க வழக்கங்களில் ஊடுருவிச் சென்றிருக்கின்றன என்பது புரிகிறது.