பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191

நற்குலத்தோர்

கற்றவர்கள், அறிவாளிகள், பெருந் தன்மையான குணம் படைத்தவர்கள், சான்றோர்கள் என்றபடியெல்லாம் பேசப்படுகின்ற மக்களை நல்ல குலத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வது வழக்கம், மேலோர்கள், நற்குலத்தோர் என்று சொல்லுகின்ற சொற்களெல்லாம் ஒழுக்கமுள்ளவர்களையும் தர்ம சிந்தனை படைத்த பெரியோர்களையும் -- இவர்கள் போன்ற மக்களையும்தான் குறிப்பதாகும்.

மண்ணின் தன்மை

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கின்ற மண்ணின் தன்மையைத் தெரிந்து கொள்வதற்கு அங்குள்ள மண்ணை எடுத்து மண் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு அனுப்பி அந்த மண்ணின் பண்பினைச் சொல்லுங்கள் என்று கேட்கத் தேவையில்லை. அந்த மண்ணில் முளைத்திருந்த ஒரு செடியின் வேர் -- முளை இவற்றை எடுத்து அந்த ஆராய்ச்சியில் தேர்ந்த கெட்டிக்காரர்களைக் கேட்டால் அந்த மண்ணின் தன்மையைச் சொல்லிவிடுவார்கள்.

'நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்' என்பதாக ஒரு குறட்பா சொல்கிறது. அதாவது ஒரு நிலத்தின் பூமியின் மண்ணின் குணத்தைத் தெரிந்து கொள்வதற்கு அந்தச் செடியின் வேர்களைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம் என்ற குறிப்பு இங்கே சொல்லப்படுகிறது. வேர்களைப் பார்க்க வேண்டுமென்றால் வேகமாகச் செடிகளைப் பிடுங்க வேண்டும். பிடுங்கி எடுத்தல் என்பது நடைமுறையில் சொல்லப்படுகின்ற பழக்கமாக இன்று கூட இருந்து வருகிறது. எப்படி ஒரு முளை அல்லது வேர் மண்ணின் குணத்தைக் காட்டுகின்றதோ அது போலவே ஒருவன் பேசுகின்ற சொற்களைக் கொண்டே அவன் எப்படிப்பட்ட குலத்தில் பிறந்தவன் என்பதைச் சொல்லி விடலாம்.