194
குணம் என்னும் குன்று
"குணம் என்னும் குன்று ஏறி நின்றார்" என்று அறவோர்களாகிய அந்தணர்களைச் சிறப்பித்துக் கூறினார் ஆசிரியர்.
இறைவனுக்கு இலக்கணம் சொல்ல வந்த ஆசிரியர் திருவள்ளுவனார் "எண் குணத்தான்' என்றுதான் குணத்தின் மேல் வைத்து விளக்கம் எடுத்துக் காட்டினார். சில மதத்தினர் பண்புகளைக் குறிக்கும் சொற்களைத் தங்கள் பெயர்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். விசுவாசம், ஆனந்த்ராஜ், பாக்யம், அடைக்கலம் மற்றும் இவைபோன்ற பெயர்களைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட நண்பர்களை ஒருவிதத்தில் நாம் பாராட்டலாம்.
பண்பில்லாத அறிவு
சிறந்த அறிவாளியாக ஒருவன் இருந்தாலும்கூட, அவனிடம் நல்ல குணங்கள் இல்லாமற்போனால் அவன் யாருக்கும் பயனில்லாதவனாகப் போவான். "அறிவினால் ஆகுவது உண்டோ?" என்று திருவள்ளுவர் கேட்டு வைத்தார். பிறருக்குப் பயன்பட்டு இயன்றவறை உதவி செய்து அன்பு, கருணை என்கிற குணங்களே இல்லாமல் இருப்பவனுக்குப் பெரிய அறிவு இருந்துதான் என்ன பயன்? ஆதலால்தான் மற்றவர்களுக்குக் கடுகளவேனும் பயன்படாமல் இருக்கின்ற அறிவாளியைப் பார்த்து 'உனக்கு அறிவு இருந்து என்ன பயன்?' என்று திருவள்ளுவர் கேட்டார்.