பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

பிண்டம்'. இப்படிச் சொல்லத் தெரியாமல் சிலர்----முண்டம் என்றும் சொல்லுவார்கள்,

நம்முடைய உடம்பில் இருக்கும் ஐந்து பூதங்களையும்:ஆசிரியர் திருவள்ளுவனார் குறிப்பாக, ஒரு குறட்பாவில் உணர்த்துகின்றார்.


போலிகள்

துறவிகள் போல் வேடம் போட்டுக் கொண்டு தங்களுடைய சிறிய இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளுகின்ற வஞ்சகர்களைப் பற்றி "கூடாவொழுக்கம்" என்ற அதிகாரத்தில் கூறுகின்றார். வஞ்சனையான மனமுள்ள ஒருவன் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாகத் தீய ஒழுக்கத்தில் நடப்பதைப் பார்த்து, உடம்போடு கலந்து நிற்கின்ற ஐந்து பூதங்களும் தம்முள் சிரித்துக் கொள்ளுகின்றன என்று, குறட்பா ஒன்று கூறுகின்றது.

“வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் (கு. 271)

இக்குறட்பாவில் ஒரே பொருளினைக் கொடுக்கக் கூடிய அகம், மனம் என்ற இரண்டு சொற்களும் சிந்திக்கத்தக்கன வாகும். அவனைப் பற்றிக் குறிப்பிடும்போது, மனத்தான் என்றும், பூதங்களைப்பற்றிச் சொல்லும்போது, 'அகத்தே' என்றும் சொல்லி வைத்தார்.


தூய்மைக்காக

அனைத்துக்கும் மூல காரணமாய் அமைந்திருப்பது மனமே ஆகும், மனத்தினைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நடைபெறுகின்ற செயலைத்தான் 'தியானம்' என்று கூறுவார்கள்.