பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

இந்த இரண்டு குறட்பாக்களும் மனத்தினைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பெரிய உண்மையினையும், மனம் தூய்மையில்லாமல் செய்யப்படும் செயல்கள் எல்லாம் போலியாகவும், வெளிப்பகட்டு---ஆரவாரங்கள் ஆகவும் முடியும் என்பதும் கூறப்பட்டது. '

இறைவன் நற்குணங்கள் அனைத்தும் உருவானவன் ஆனபடியால் தீய குணங்களும் எண்ணங்களும் மனத்திலே வாராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த முயற்சியினைத்தான் தியானத்தின் முதற்படி என்று அறிதல் வேண்டும்.

உள்ளத் துடிப்பு

இறைவனை அடைய வேண்டும் என்ற உள்ளத் துடிப்பு வளர்ந்து மிகுதிப்படுமேயானால், அத்தகையவர்களுக்கு இறைவன் குரு வடிவமாகக் காட்சியளிப்பான் என்பது திண்ணம். இறைவனை அடைய வேண்டும் என்ற உள்ளத் துடிப்புக்கு---வேகத்திற்கு---ஒரு உதாரணம் சொல்லலாம்.

தண்ணீருக்குள் ஒருவன் மூழ்கி மூழ்கி நீராடுகின்றான். தண்ணீருக்குள்ளேயே அதிக நேரம் இருக்கமுடியாது. மூச்சு விடமுடியாமல் திணறல் ஏற்பட்டு விடும். ஒருவன் சில நிமிடங்கள் அதிகமாகவே இருந்துவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம், இனியும் நீருக்குள் இருந்தால் மூச்சு விடமுடியாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகிறபோது அதிவேகமாக வெளியே வர நீரின் மேல் தலையை உயர்த்துகிறான். அந்த நேரத்தில் அவன் தலையை இரண்டு பேர் நீருக்குள் அழுத்திவிட முயற்சிக்கிறார்கள் என்றால் அவனுக்குத் தலையினை வெளியே கொண்டுவர உண்டாகின்ற துடிப்புக்கு அளவு சொல்ல முடியுமா? மிக அதிகமான வேகத்தில் அல்லவா வெளிவர முயற்சிக்கின்றான்.சி.க.---2