பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பயிற்சியினால் பல பிறவிகளில் தொடர்ந்து வருகின்ற வினைப் பயன்கள் எல்லாம் மறைந்து போகும்படி செய்ய: முடியும். முன்னர் நாம் குறிப்பிட்டவாறு, மனம் என்கின்ற இரும்பினை---தியானம் என்கின்ற நெருப்போடு சேர்த்து விட்டால், ஆசைகள் என்கிற பூச்சி புழுக்கள் தாமாகவே ஓடிவிடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


குருமார்கள்

குருமார்களை இறைவனாகவே கருதவேண்டும், என்பது மிகப் பெரிய உண்மையாகும். இறைவன் குரு வடிவில் காட்சி அளிக்கிறான் என்பது பேரறிஞர்களின் கருத்தாகும். முற்றும் துறந்த முனிவர்களான அறவோர்களே குருமார்கள் ஆவார்கள். அவர்களே ஞான நிலையில் முதிர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள். குருமார்கள் பார்வையே நம்மைப் புனிதமாக்கும். குருமார்கள் உபதேசம் செய்தால் தான் ஆன்மீகத் துறையில் பயிற்சி செய்து முன்னேற்றம் அடைய முடியும் என்பது உலகியல் உண்மையாகும். இந்த உண்மையினைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்ளுதல் இன்றைக்கு இன்றியமையாததாகும்.

குருமார்கள், எல்லோருக்குமே எளிதாக உபதேசம் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை. பக்குவம் பெற்ற ஆன்மீக அன்பர்கட்கே அருளாளர்கள் உபதேசிப்பார்கள் என்று சொல்வது உண்டு. உலக வாழ்க்கையில் பலர் பற்பல வகையான துறைகளில் கல்வி, கேள்வி முறைகளினாலும், ஆர்வத்தினாலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். ஆனால், ஆன்மீகத் துறை, தொடர்பாக வருகின்ற பல பிறவிகளின் பயனாகத்தான் இருக்க முடியும் என்று: சொல்வதுண்டு.