பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

ஆழ்ந்த பொருள் கொண்ட "ஞான நூல்கள்" எப்பொழுதும் நிலைத்து நிற்பனவாகும். அந்த நூல்களைப் படிக்கின்ற பொழுது மிகுந்த பலனைப் பெற முடியும். "ஆழ உழுதல்" என்று சொல்வதற்கு “ஞான நூல்களை"ப் படிப்பதை உவமையாகக் கொள்ளலாம்.

ஆசை மனம்

"மனம் விரிந்தால் பிரபஞ்சம்; குவிந்தால் முக்தி என்பது பழமொழிகளில் சிறந்த ஒரு பழமொழியாகும். மனத்தினை அடக்க முடியாமல், ஆசைகளில் எல்லாம் திரிந்து அலைந்து கொண்டிருக்கிற பொழுது இந்த உலகமே அவனுக்குக் கிடைத்தாலும் அவன் ஆசை அடங்காது என்று கூறுவர். இத்தகைய சிந்தனைகளை மெய்ப்பிப்பது தான் இந்தப் பழமொழியின் அடிப்படையான கருத்தாகும்.

மனத்தினை மகான்களால் தான் அடக்க முடியும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே பேசப்படுவதைக் கேட்டு வருகிறோம். அதாவது உலக ஆசைகளை அனைத்தையும் முற்றிலும் விட்டுவிட்டவர்கள் தான் மகான்கள் என்று நூல்கள் கூறுகின்றன. மனத்தினை அதன் போக்கிலே போக விடாமல் அறிவின் துணை கொண்டு. மனத்தைக் கட்டுப்படுத்தி முறையாக வாழ்க்கை நடத்து பவர்களே இவ்வுலக வாழ்க்கையில் மேலானவர்களாக இருந்து சிறப்படைய முடியும்.

அறிவே தெய்வம் என்ற உயர்ந்த கருத்தினைச் சொல்ல வந்த மகான் தாயுமான .சுவாமிகள், "சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே" என்று கூறிவைத்தார். இறைவனுக்கு விளக்கம் சொல்லுகின்ற திருவள்ளுவர், "வாலறிவன் என்று சிறப்பாகக் கூறுகின்றார். அறிவின் துணைகொண்டு அனைத்தையும் செப்பனிட்டு வாழ முடியும் என்ற உண்மையினை மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் உணர்ந்து அறிதல் வேண்டும்.