பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

உடம்பினைத் தூய்மைப் படுத்துவதற்கு நாம் நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறோம். உடம்பினை தண்ணீராலும், வெந்நீராலும் தூய்மைப்படுத்துகிறோம். மற்றும் பல பொருட்களின் துணை கொண்டு உடம்பினைத் தேய்த்துத் தூய்மைப் படுத்திக் கொள்கிறோம்.

அப்படியானால், மனத்தினைத் தேய்த்துத் தூய்மைப் படுத்துவதற்கு எங்கேயாவது ஏதேனும் பொருள்கள் இருக்கின்றனவா? இல்லையே! “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்கள் என்று இராமலிங்க அடிகள் பாடினார். மனத்தினை. உறுதிப்படுத்துவதற்கும், தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும் இறையருள் சிந்தனை பெரிதும் துணையாக இருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

மனத்தில் கொடுமையான தீமையான அழுக்குகள் எனப்படுகின்ற தீமைகளை வைத்துக்கொண்டு உயர்ந்த மக்களைப் போல காட்சி அளித்துக்கொண்டு நீரில் மூழ்கி அத்தகைய வெளித் தோற்றத்தினைக் காட்டிக்கொண்டு தீய ஒழுக்கத்திலேயே இருந்து கொண்டிருப்பவர்கள் இவ்வுலகில் பலர் இருக்கின்றார்கள் என்று ஆசிரியர் திருவள்ளுவனார் எளிமையான சொற்களில் சொல்லி வைத்தார்.

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர். (கு.278)

இந்தக் குறட்பாவினைப் பன்முறையும் சிந்தித்துப் பார்த்தால், மனத்தினைத் தூய்மையாக வைக்காமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் பயனற்றவைகளே ஆகும் என்று நன்கு புரிவதாகின்றது.

பாரத தேசத்தில் எண்ணிறந்த மகான்கள் தோன்றி பொன்மொழிகளை அளித்துச் சென்றிருக்கிறார்கள், மகான் 'கபீர்தாஸ்' என்பவர். வெளிப்படையாகச் சொல்லியுள்ள கருத்தினைச் சிந்திக்க வேண்டும்.