பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

தம் வீட்டிற்கு வருகின்ற செய்தியை மனைவியிடம் சொன்னார். உடனே மனைவி மகிழ்ச்சி பொங்க வீட்டைக் கழுவி தூய்மைப்படுத்தி, இருக்கின்ற பொருள்களை எல்லாம் அழகாக வைத்து வருகின்ற பெரியவர் மகிழ்ச்சியுடன் வந்து உட்கார வேண்டுமே என்று அழகுபடுத்தி வைக்கின்றார்.

அந்தப் பிரமுகரும் மனமகிழ்ச்சியுடன் வந்து இருந்து விட்டுச் செல்லுவார். அப்படிச் செய்யாமல், தோட்டத்திலிருக்கும் குப்பைக் கூளங்களை வாரிக் கொண்டு வந்து உட்காருகின்ற கூடத்தில் போட்டுப் பரப்பி வைத்தால் அந்தப் பெரியவர் இவைகளைப் பார்த்து வீட்டிற்குள் நுழைவதற்கு விரும்புவாரா? நம் போன்ற ஒரு மனிதர் நம் வீட்டிற்குள் வந்து தங்குவதற்கே வீட்டினை அவ்வளவு தூய்மையாக வைக்கிறோம் என்றால், எல்லாம் வல்ல இறைவன் வந்து தங்குகின்ற மனமாகிய வீட்டினை நாம் எவ்வளவு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்? அப்படிப்பட்ட எண்ணங்களை நன்கு சொல்லித் தர வேண்டும்.

பாதையில் நடந்து செல்லுகின்ற ஒருவன் கையில் வைத்திருந்த பணம் இருட்டில் கீழே விழுந்து விட்டது. தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. தேடிக் கொண்டிருக்கிற அவனைப் பார்த்துப் பெரியவர், “விளக்கு வெளிச்சத்தில் தேடப்பா என்று சொன்னார். அதைக் கேட்ட அந்த ஆள் அந்தப் பாதையிலேயும், வேறு இடங்களிலேயும் விளக்கு வெளிச்சம் இருக்கின்ற இடத்திலே எல்லாம் தேடிக்கொண்டிருந்தான்.

இது என்ன பைத்தியக்காரத்தனம்; 'விளக்கு வெளிச்சத்தில் தேடப்பா என்றால், எந்த இடத்தில் பணம். விழுந்ததோ, அந்த இடத்தில் விளக்கினை வைத்துக் கொண்டு தேட வேண்டும் என்பது தானே பொருளாகும்?சி.க.-----4