பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

வேரைப் பிடுங்கினார் என்று சொல்லுவது உலகில் வழக்கமாகும். அதுவே போல, ஒருவன் பிறந்த குலத்தின் தன்மையினையும், அவன் பழகுகின்ற பழக்கத்தினையும், அவன் பிறந்திருப்பது நல்ல குலமா, அல்லது தீயவர்கள் குலமா என்று அறிந்து கொள்வதற்கு அவனுடைய சொற்களே சான்றாக அமையும் என்று ஆசிரியர் கூறுகின்றார்.

சிலர் பேசுகின்ற பொழுது பிறர் மனம் புண்படாமல் பேசுவார்கள். அது ஒரு நல்ல குணம். இனிமையான சொற்களைச் சொல்லுகின்றவர்களை நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லுதல் வேண்டும்.

பரம்பரை

சிலர் பேசுகின்றபொழுது இயல்பாகவே கடுமையான சொற்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். பேசுகின்ற பொழுது இழிவான சொற்களை அடிக்கடி ஒரு சிலர் சொல்லுவார்கள். தீய பரம்பரையில் அவர்கள் வந்தவர்கள் என்று பொருளாகும். தீயவர்கள் குலத்தில் பிறந்தவர்கள், குலத்தின் தன்மையினால், சூழ்நிலைகளினால் நல்ல சொற்களையே பேச மாட்டார்கள். அவர்கள் வாயிலிருந்து வருகின்ற சொற்கள் எல்லாம் கடுமையானவைகளாகவே இருக்கும்.

ஆதலால், ஒருவன் பேசுகின்ற பொழுது, அவன் வாயிலிருந்து வருகின்ற சொற்களைக் கொண்டே அவன் எப்படிப்பட்ட குலத்திலிருந்து வருகின்றான் என்று நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். பலரைத் தேடிப் போய் இவன் எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவன் பேசுகின்ற சொற்களே அவன் இன்ன தன்மையான குலத்தினைச் சார்ந்தவன் என்று காட்டி விடுவதாகும்.