பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கூடா ஒழுக்கத்தினர்

நெஞ்சத்திலே வஞ்சனை வைத்து வாழ்கின்ற மக்கள் நிறைந்து இருக்கின்ற சமுதாயம் எக்காலத்திலும் முன்னேற்றம் அடையாது. தீய ஒழுக்கம் உள்ளவர்களை, சுட்டிக் காட்டுகிறபொழுது 'வஞ்ச மனத்தார்' என்று திருவள்ளுவர் அழைக்கின்றார்.

திருக்குறளில் 'கூடா ஒழுக்கம்' என்ற பெயரில் ஒரு அதிகாரம் இருக்கின்றது. மனம் தூய்மை இல்லாமல் வெளித் தோற்றத்தினால், பொலிவாகக் காட்டிக் கொண்டு பார்ப்பவர்களுக்கு மிகமிக நல்லவர்கள் போல் காட்சி அளிப்பவர்கள் பலபேர் உண்டு, தெய்வ நெறியில் பற்றுக் கொண்டவர்கள் போல உடை உடுத்திக் கொண்டு, தீய எண்ணத்தை மனத்தில் வைத்து ஏமாற்றித் திரிகின்ற தீய ஒழுக்கத்தினரைப் பார்த்து 'கூடா ஒழுக்கம்' என்ற அதிகாரம் விளக்கம் செய்து காட்டுகிறது.

வஞ்சமனம்

"ஏ! மனிதனே! கொடிய வஞ்சனை நிறைந்த மனத்தை உடையவனாக இருக்கின்றாய். நீ, தீய ஒழுக்கம் உள்ளவன். அதனை மறைத்து வெளித் தோற்றத்தில், காட்டி வஞ்சனை செய்கிறாய். உன் தீய செயல்களை உன்னுடனே உடம்போடு கலந்திருக்கின்ற ஐந்து பூதங்களும் தமக்குள்ளே சிரிக்கின்றன." இந்தக் கருத்தினை எளிமையான குறட்பா ஒன்று தெளிவு படுத்துகிறது----

"வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

இவ்வாறு தீய ஒழுக்கத்தினரைப் 'புலித் தோல் போர்த்திய பசு' என்பதாக குறட்பா ஒன்று சொல்லுகிறது.