பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

பாழ்பட்டுச் சீர்கெட்டு எல்லா நிலையிலும் அடிமைப்பட்டு விலங்கோடு விலங்காக மாந்தர் வாழ்வதை முற்றுணர்ந்து கிளர்ச்சிக்காரரானார். எந்த இடர்பாட்டையும் தொல்லையையும் எதிர்கொள்ளாமல் இந்த நாட்டில் - இந்த உலகத்தில் எந்த ஓர் உள்ளது சிறத்தலும் (evolution) ஏற்படாது என்பதை அறிந்தார். வாழும் தன்மையுள்ள ஒரு முழுமையான உயிர்த்தன்மையான புதுமலர்ச்சியே பேருண்மை என்பதை அறிந்து சொல்லாலும் எழுத்தாலும் செயலாலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

உலகின் அனைத்துச் சமயங் (மதங்)களும் அன்பை - உண்மையை - ஒழுக்கத்தை மேலுக்குப் பேசுகின்றனவே தவிர எவையும் இம் மூன்றையும் கடைப்பிடிப்பதில்லை. இம் மூன்றும் சமயத்தை உண்டாக்காத முன்னோடிகளோடு சரி.

“யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா”

என்ற உண்மையை உணர்ந்தவர்கள் கோடியில் ஒருவர் கூட இல்லை.

உயிர் வாழ்வதும் செயல்புரிவதும் ஒன்றோடொன்று தொடர் புடையவை என்ற அடிப்படை உண்மையை மாந்தன் மறக்கவே கூடாது. உண்மையை அடைய மனம் இம்மியளவுகூட உருக்குலை யாமல் முற்றும் விடுதலை பெற்ற நிலையில் இருந்தாக வேண்டும். விடுதலை என்பது மனநிலை. அன்பின் உயிர்நிலை. உண்மையின் உயர்நிலை. ஒவ்வொரு நாளும் சீரான வாழ்வு வாழும் பேருணர்வு நிலை. சார்ந்து வாழ்தல் - பின்பற்றுதல் - கொள்கை - குறிக்கோள் - கோட்பாட்டின் வீட்டில் வாடகை இருத்தல் எல்லாம் நம்மை ஓர் எல்லைக்குள் வைத்துப் பூட்டிவிடுகின்றன. நம் உள்ளத்தை வற்றல் மரமாக்கி மடமையில் ஆழ்த்திவிடுகின்றன.

4