பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

அவன் அழியக்கூடிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன் சொத்துச் சுகங்களைப் பெருக்கிக் கொள்வதை விட்டு அவனை விட்டு வெகுதூரத்தில் இருந்துவிடக் கூடாதென்றும் சிலர் சொல்லுவார்கள். இந்த நடுத்தரமான வழி சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது நடைபெறக் கூடியதல்ல. அரசர்களை விட்டு முற்றும் விலகியிருப்பதோ அல்லது மிக நெருங்கியிருப்பதோ ஆகிய இரண்டில் ஒன்றுதான் கையாள முடிந்த வழிகள். மற்ற எந்த வழியைப் பின்பற்றுகிறவர்களும், அவர்கள் எவ்வளவு மேன்மையுடையவர்களாயிருந்த போதிலும் தம்மைத் தாமே நிலையான ஆபத்துக்கு ஆளாக்கிக் கொள்பவர்கள் ஆகிறார்கள். “நான் எதற்கும் கவலைப்படவில்லை. பெருமையும், இலாபமும் அடைய நான் விரும்பவில்லை. அமைதியாக எவ்விதமான தொந்தரவுமின்றி வாழ விரும்புகிறேன்” என்று எவரும் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது. சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்கள் விருப்பப்படுகின்ற முறையில் நடத்தமுடியாது. அவர்கள் உண்மையாகவே எவ்விதமான பேராசையுமின்றித் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள முயன்றாலும் அவர்கள் நம்பப்படமாட்டார்கள். அந்த நிம்மதியான வாழ்க்கையில் அவர்கள் ஒட்டிக்கொள்ள முயன்றாலும் மற்றவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள்.

சமயத்தில் புரூட்டசைப் போலக் கபட நாடகம் ஆடுவது புத்திசாலித்தனமானது. தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாய் அரசனை மகிழ்விப்பதற்காக அவனைப் புகழ்ந்தும், உடன் பேசியும், பார்த்தும், காரியங்களை நடத்தியும் தங்கள் எண்ணத்திற்கு மாறுபட்ட முறையில் நடந்தால் போதுமானது.

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

-திருக்குறள்