பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

நேரில் அறிந்து வரும்படி அனுப்பப்படவேண்டுமென்று எண்ணினார்கள். வேறு சிலர், தங்களில் பலபேர் அவ்வாறு அனுப்பப்படவேண்டுமென்று கருதினார்கள். மற்றும் சிலரோ, இந்தத் தொந்தரவே தேவையில்லையென்றும், நரகலோகத்துக்கு வந்துசேருகிற சில பாபாத்மாக்களை அச்சுறுத்தி உண்மையைக் கக்கவைத்து விடலாமென்றும் நினைத்தார்கள். ஆனால் பெரும்பான்மையினர், ஒரே ஒருவர் மட்டும் பூமிக்கு அனுப்பப்பட்டால் போதுமென்ற கருத்தை ஆதரித்ததால், எல்லோரும் அந்த முடிவை ஏற்றுக்கொண்டார்கள். யாரும் இந்தக் காரியத்தைச் செய்யத் தாமாக முன்வராததினால் திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்ப்பதென்று முடிவு செய்தார்கள். இந்தத் துரதிர்ஷ்டம் தலைமைப் பேய்த் தூதரான பெல்பாகருக்கு ஏற்பட்டது. பெல்பாகர் நரகலோகத்தில் வந்து விழுவதற்கு முன்னால் தேவலோகத்தில் தலைமைத் தேவதூதராக இருந்தார். இப்போது தலைமைப்பேய்த் தூதராக இருந்து வருகிறார்.

பெல்பாகருக்கு இந்த வேலையை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையென்றாலும், நரகலோக அதிபதியான புளூட்டோவின் அதிகாரத்திற்கடங்கி நடக்க வேண்டிய கட்டாயத்திற்காக ஆலோசனை சபையின் முடிவுப்படி நடக்க ஒப்புக் கொண்டார். சபையினர் பூலோகம் செல்பவரை கீழ்க்கண்ட ஏற்பாட்டின்படி அனுப்புவதென்று முடிவு செய்தார்கள்.

பூலோகம் செல்லுபவர் மனித உருவம் எடுத்துக்கொண்டு போய் அங்கு ஒரு மனைவியைத் திருமணம் புரிந்துகொண்டு பத்து ஆண்டுகள், வாழவேண்டும். முடிவில், செத்துப் போவதுபோல் நடித்து நரகலோகத்துக்குத் திரும்பி வந்து குடும்பபாரத்தில் ஏற்பட்ட நன்மை தீமைகளைத் தன் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பத்து ஆண்டுகளும் அவர் செலவுக்காக ரொக்கமாக ஓர் இலட்சம் டூச்சாட்டு நாணயங்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார். இது தவிர அந்தக் குறிப்பிட்ட பத்தாண்டுக் காலத்திற்குள் அவர் மனிதர்கள் அனுபவிக்கக் கூடிய நோய்கள், சிறைச்சாலை வாசம், வறுமைத்துயர் ஆகிய துன்பங்களையும் அனுபவிக்கக் கட்டுப்பட்டவராவார். வேண்டுமானால், தந்திரமாகவோ அல்லது மற்றவர்களை ஏமாற்றியோ அவர் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.